Welcome!


அவன் வந்தான்:

3:18 PM Posted In Edit This 0 Comments »
ஆண்டவன் ஒருநாள் வந்துநின்றான்
ஆட்டம் கற்றுத்தர வந்தேன் என்றான்
ஆட்டங்கள் அறியாத என்னிடத்தே
அபிநயம் பிடித்துக் காட்டிநின்றான்

நிமிர்ந்து என்னை அமரச் சொன்னான்
நாடிமூச்சில் இணையச் சொன்னான்
கண்ணிரண்டும் மூடச் சொன்னான்
உள்ளுக்குள்ளே தேடச் சொன்னான்

கண்முன்னே கடவுள் என்றான்
தவறாய் நான் புரிந்திருந்தேன்
கண்திறந்து நானும் ஆமாமென்றேன்
ஐயகோ அவனும் நொந்துகொண்டான்

சொன்னபடியே செய்து பார்த்தேன்
மனதில் ஒருகணம் வந்து போனான்
இழுத்துப்பிடித்து தொடர்ந்திடவோ
இவனுக்கு ஏனோ முடியவில்லை

நினைக்கும் பொழுது அழைக்கச் சொன்னான்
வீட்டின் வழியும் சொல்லிப் போனான்
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால்
வானில் நிலவாய் சிரித்திருந்தான்

பூப்பறித்து பழக்கமில்லை..

3:16 PM Posted In Edit This 3 Comments »


சிரித்துக்கொண்டே வாடிப்போன
நேற்றைய பூக்களின்
விலாசத்தை தாங்கிக்கொண்டு
இன்றைய அரும்புகள்!

* * * *

காலமாற்றத்தில்
மாறாத கால்த்தடங்களில்
உருவாக்கப்பட்ட பூவாசங்கள்!

* * * *

எனக்காக பூக்கின்றன
பூக்கள்!
அவர்களுக்காய்
நானும் எனது புன்னைகையும்
எனது சில கவிதைகளும்!

* * * *

கூடைகளில்
பூ நிரப்பி பழக்கமில்லை
நுரையீரலில் மட்டும்
வாசங்கள்!

* * * *

பூஜையறையில்
ஆண்டவனிடமும் சொல்லிவிட்டேன்
பூப்பறிப்பு என் பழக்கமில்லை
பூவாசம் வேண்டுமென்றால்
எழுந்து வா தோட்டத்திற்கு!

* * * *

நண்பன்!

2:47 PM Posted In Edit This 3 Comments »

எனக்கொரு நண்பன்

ஆண்டவனின்
நட்பெனும் மாலையில்
அருகருகே கட்டப்பட்ட
இரு மல்லிகளாய்
நாங்கள்!

மூக்கு ஒழுகிக்கொண்டு
சுற்றிய நாட்களிலேயே
அரும்பான நட்பு
நாங்கள் வளர
அதுவும் வளர்ந்தது

அவனுடைய
ரமலான் நோன்புக்கும்
அம்மாவிடம்
சாப்பிட்டதாய் பொய்சொல்லி
நான் எச்சில் விழுங்காமல்
இருந்ததையும்,

எனக்கு பிடித்த கொழுக்கட்டை
அவன் அம்மா செய்து வைக்க
எனக்காய் எடுத்துக்கொண்டு
ஓடி வருததையும்

இன்றும் நினைத்து
என்னால் கர்வப்படாமல்
இருக்க முடிவதில்லை.

கிடைத்த ஒரே பொன்வண்டையும்
எனக்காக கொண்டுவந்தவன்

எங்கள்வீட்டு சரஸ்வதி பூஜையில்
புத்தகம் கொண்டுவந்து
அழகாய் பொட்டிட்டு வைப்பவன்

உயிர் காத்த தோழன்தான்..
காட்டாற்று ஓடையில்
நீச்சல் தெரியாத நான்
ஆர்வத்துடன்
கால்வைத்த போதிலும்..

இன்று காலவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
இருவேறு திசைகளில்
அவனும் நானும்..

நீச்சல் தெரிந்தும்
போய்க்கொண்டிருக்கிறோம்
அலைகளின் போக்கில்..
காலத்தின் தந்திரத்தில்..

அறிவியல் வளர்ச்சியில்
உலகில் யாவரையும்
அதிகப்படியாய்
அடுத்த நாளில் காணலாம்
என்றாலும்...
அடுத்த நாளின் தீர்மானங்கள்
கடமைகளின் காலடியில்தான்
கட்டப்பட்டு கிடக்கின்றன

காத்திருப்போம்..
நாட்கள் அதிகமில்லை..
அதிகப்படியாய் தள்ளாடும் வயது
மீண்டும் கைகோர்த்தபடி ரசித்திருப்போம்
அதிகாலை நிலவையும்
அந்தி வானத்தையும்..
அதே பழைய படகில் இருந்தபடியே!

மயானம்

3:31 PM Posted In Edit This 0 Comments »


எல்லாமே
தத்துவம்தான் இங்கு

புயலுக்குப் பின்னே அமைதியென
இயல்பாகவே
தத்துவம் சொல்லி நிற்கிறது
மயானம்

ஞானச் சாரளத்தின் வழி
பசியுடன் நிலவைத்தேடும்
சில பல மனிதர்களின்
பெளர்ணமி

பிரபஞ்சத்தின்
அமைதியும் அதிர்வும்
பூமித்தடாகத்தில்
முத்தமிடும் தடங்கள்

இங்குவந்தபின் கண்டவர் சிலர்..
வராமலும் கண்டவர் பலர்..
இங்கு எற்றப்பட்ட
ஒவ்வொரு முழுகுவர்த்தியும்
ஒருவனுக்கு ஞானப்பாதை
காட்டியது என்றாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

முட்டிமோதி சிரித்து நடிக்கும்
தாகமான வாழ்க்கையின்
எதிர்ப்புறத்திலான ஒரு வாசல்
இங்குதான் எங்கேயோ
ஒளிந்து கொண்டிருக்கிறது..

பிறவி இருளை
கிழித்துக் காட்டுகிற
ஒரு மின்மினிப் பூச்சிகூட
இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது
தவத்துடன்.

இறுதியாய்..
இங்கு வந்த ஒவ்வொருவனின்
இறுதிப் பயணத்திலும்
அவனுக்கு முன்
ஆட்டமாடி வந்தவனும்
தத்துவம் ஒன்றை
சொல்லிவிட்டுத் தான் போனான்.

'எங்கோ தொடங்கி
எஙகெங்கோ சுற்றிக்கொண்டு
மயானத்தில் முடித்துக்கொண்ட
ஆட்டத்தில்!'

நிலவு - 3

7:12 PM Posted In Edit This 1 Comment »
கண்ணாடி காணும்போதெல்லாம்
நெற்றிப்பொட்டை சரிசெய்து
அழகு பார்க்கும்
கன்னிப்பெண்ணின் சாயலில்
சாலையோரம் தேங்கிய மழைநீரில்
முகம்பார்த்து மகிழ்கிறது
நிலவு.

அரவாணி

11:27 PM Posted In Edit This 5 Comments »
ஆண்டவன் தொடுத்த மாலையிலே
உதிரிப்பூக்கள் நாங்கள்தாம்
அவனே படைத்த புத்தகத்தில்
அச்சுப்பிழைகள் நாங்கள்தாம்

உதிர்ந்த பூவுக்கும் மணமுண்டு
எங்களுக்கும் ஓர் மனமுண்டு
அதனைப் புரிந்து நட்புடனே
புன்னகை புரிந்திட யாருண்டு?

அருமை அண்ணன் ச்சீ என்றான்
அன்பு அப்பா போ என்றார்
அலறித் துடித்து அம்மா மட்டும்
ஆண்டவனிடத்தில் ஏன் என்றாள்

ஏளனப் பார்வையும் கிண்டல்களும்
எவ்விடமிருந்தும் வருகிறதே
ஏக்கப்பார்வையை எங்கள் முகத்தில்
எத்தனை நாள்தான் வைத்திருப்போம்?

அடிப்படை உரிமைகள் எமக்கில்லை
அங்கீகாரங்கள் எதுவுமில்லை
வறுமைப் பிடியில் தவிக்கின்றோம் எங்கள்
திறமையை யாரும் பார்ப்பதில்லை

தேவை உங்கள் பிச்சையல்ல
பாலியல் தொழிலும் தேவையல்ல
திறமை கண்டே மதித்திடுக
நட்புடன் புன்னகை செய்திடுக

தனிநாடு எதுவும் கேட்கவில்லை
ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை
அடிப்படை உரிமைகள் மட்டேனும்
அன்புடன் எமக்கு தந்திடுக.

புதுமைப்பெண்?

8:20 PM Posted In Edit This 1 Comment »
தலமேல மண்சட்டி வயித்துக்குள்ள பொட்டப்புள்ள
இப்படித்தான் நானிருக்கேன் எறத்தாழ அஞ்சுவருசம்
பெத்த வீட்டுலயும் பவுசாத்தான் நானிருந்தேன்
தாலி வாங்கும்போதே தலயெழுத்தும் மாறிடுச்சு

கைபுடுச்ச பொண்டுப்பய மேஸ்திரின்னு சொல்லிக்குவான்
காசுபணம் சேந்துப்புட்டா சீட்டாடித் தோத்துடுவான்
அஞ்சுரூவா பத்துரூவா செங்கச்சுமந்து கொண்டுபோனா
அதயும் புடுங்கிக்கிட்டு சாராயம் குடிச்சிருவான்

வக்கனையா பெத்தாச்சு மொத்தம் நாலுபுள்ள
பசிக்கு அழும்போது கஞ்சிகுடுக்காட்டி பாவமில்ல?
கல்லுடைக்க மண்சுமக்க உடம்புல தெம்பிருக்கு - அவன்
காசவந்து புடுங்கும்போது போராட தெம்புயில்ல

புள்ளைக்கு மனசுரொம்ப சோறுபோட்டு நாளாச்சு
தினமும் சாப்பாடோ கவர்மெண்ட் சத்துணவு
பாவிப்பய இவன்மட்டும் எங்காசும் புடுங்கிப்போயி
தினமும் குடிச்சுப்புட்டு என்னயப்போட்டு அடிக்கிறான்

இன்னைக்கி ஜெயிச்சுட்டேன் புள்ளைக்கெல்லாம் சுடுசோறு
வயிறார சாப்பிட்டுட்டு சீக்கிரமா தூங்குங்கடி
மனசார முடிவெடுத்தேன் புருசன் எனக்கு வேணாம்ணு
மாரியாத்தா மன்னிச்சுக்கோ அவன்சோத்துல விஷமிருக்கு.