Welcome!


மீட்பு

9:52 AM Edit This 6 Comments »
இச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது. சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html


பவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீதி தண்ணீரில் முகத்தைக் கழுவி உடுத்தியிருந்த கைலியிலேயே குனிந்து முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் என்னைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தான்.

" ஏ.. வாடா பவுனு, எப்பிர்ரா இருக்கே " என்றபடி அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்தபோது " பரவாயில்லடா, திண்ணயிலயே உக்காரலாம் " என்று சொல்லி அமரப்போனவனை சரிதான் வாடா என்று உள்ளே இழுத்து வந்தேன். சோபாவில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு அதில் அமரச் சொன்னேன். அருகே நின்றிருந்த அம்மா ஏதாவது நினைத்துக்கொள்ளக்கூடும் என்று தயங்கியபடியே நின்றான்.

அவனது அம்மா தங்கச்சி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துவிட்டு அம்மா உள்ளே சென்றுவிட்டாள். அப்பொழுதும் அமராமல் நின்றுகொண்டிருந்தவனை " ஒத வாங்கப்போறடா நீ , உக்காரு " என்றபடி தோளை அழுத்தி உட்கார வைத்தும்கூட சோபாவின் நுனியிலேயே அமர்ந்திருந்தான். அவ்வளவு சொல்லியும் வீட்டுக்குள் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவனும்தான் என்ன செய்வான், பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறான்.

சரி, பரவாயில்லை என்று கடைசியில் திண்ணைக்கே வந்தோம். அம்மா காப்பியும் முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டே தெருவை வேடிக்கை பார்த்தபடி சென்றமுறை பார்த்ததற்குப் பின்பு நடந்த அனைத்து கதைகளையும் பேசிக்கொண்டிருந்தோம்.

பவுனை எனக்கு இரண்டு வயதிலிருந்தே தெரியும். என் பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும்விட எனக்கு முதன் முதலாக அறிமுகமானவன் அவன்தான். இத்தனைக்கும் அவனுக்கு எங்கள் ஊர் கிடையாது. எங்கள் ஊருக்குத் தெற்கில் ஆற்றைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயலி தான் அவனது ஊர். அவனது அம்மா மாடத்தி எங்கள் ஊரில் பல வீடுகளுக்கு துணி வெளுக்கும் வண்ணாத்தி. எனக்கு விபரம் தெரிய எங்கள் வீட்டுக்கும் அவள்தான் துணி வெளுத்தாள். அவள் வெளுத்துக் கொண்டுவரும் உவர்மண் கமகமக்கும் துணிகளை முகர்ந்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அப்பொழுதெல்லாம் ஆற்றிலிருந்து ஒற்றையடிப்பாதை வழியே ஊருக்குள் வரும்போது எங்கள் வீடுதான் முதலாவதாக இருக்கும். பகலில் அழுக்குத் துணியெடுக்க வரும் போதும் இரவில் சோறெடுக்க வரும்போதும் இரண்டு வயது பவுனை இடுப்பில் சுமந்துகொண்டு அந்தப் பாதை வழியாகத்தான் வருவாள் மாடத்தி.

" பொதியோட புள்ளயயும் தூக்கி ஊரெல்லாம் சொமக்காட்டத்தான் என்ன, இங்கனக்கூடி விட்டுட்டுப்போ மாடத்தி, அவம்பாட்டுக்கு இங்கனக்கூடி வெளயாடிட்டு நிப்பான்..நான் வேண்ணா பாத்துக்கிடுதேன்.. " என்று ஒருநாள் அம்மாதான் சொன்னாளாம். ஆச்சியோ ஐயாவோ திட்டிவிடுவார்களோ என்று முதலில் தயங்கியவள் அம்மா மறுபடியும் சொல்லக்கேட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் பவுனை விட்டுவிட்டுப்போக ஆரம்பித்தாளாம். பின்பு அதுவே வழக்கமாகிவிட்டதாம். நானும் அவனும் ஒரே வயது எனபதால் திண்ணையில் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருப்போம் என அம்மா சொல்லியிருக்கிறாள்.

எக்காரணம் கொண்டும் தான் திரும்பி வரும்வரைக்கும் திண்ணையிலிருந்து இறங்கவும் கூடாது வீட்டுக்குள் போகவும் கூடாது என்று மாடத்தி பவுனிடம் கறாராகச் சொல்லிவிட்டுச் செல்வாளாம். அவனும் அவ்வளவு கெட்டிக்காரனாக திண்ணைவிட்டு இறங்காமல் விளையாடுவானாம். ஒரு நாள் மழைபெய்தபோது கூட திண்ணையில் சுவரோரம் ஒண்டிக்கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தவனை அம்மா இழுத்துவந்து வீட்டுக்குள் வைத்திருந்தாளாம். அப்பொழுதும் கூட நான் திண்ணைக்குப் போகணும் என்று அடம்பிடித்து ஓடிவிட்டதாக அம்மா சொல்வாள்.

நான் கல்லூரி விடுதியிலிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன் என்று அவனுக்குத் தெரியும். வருடத்தில் அந்த சமயம் மட்டும்தான் அவனுக்கும் லீவு கிடைக்கும் என்பதால் அவனும் ஊருக்கு வருவான். வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக்கொண்டு எப்படியும் என்னை பார்க்க ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் எப்பொழுது வந்தாலும் திண்ணையில் தான் உட்காருவான். அம்மா அழைத்தாலும்கூட வீட்டுக்குள் வரமாட்டான்.

இதேபோல் தான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு பல கதைகளும் பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் சிறு வயதில் இதே திண்ணையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று சிரித்துக்கொண்டே கேட்பான். என்ன என் ஞாபகசக்தியோ, அந்த நாட்கள் ஒன்றுகூட எனக்கு ஞாபகம் இருந்ததே இல்லை. ஆனால் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நான் ஒருமுறை திண்ணையிலிருந்து அவனை கீழே தள்ளிவிட்டதைக்கூட ஞாபகம் வைத்திருந்தான்.

மாடத்தி துணி வெளுக்கும் காலத்தில் கைமாத்தாக பணம் ஏதும் வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்பாள், பத்து ஐம்பது என தேவைக்கு வாங்கிக்கொண்டு அப்புறம் கொடுத்தும் விடுவாள். ஒருநாள் அவளுக்கு பணம் கொடுப்பதை பார்த்துவிட்ட ஆச்சி அம்மாவை திட்டினாளாம். மாடத்தியிடமும் " இப்டி சும்மால்லாம் கைமாத்து வாங்கிற வேல வச்சுக்கிடாத " என்று சொல்லிவிட்டாளாம். அதிலிருந்து பணமேதும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்தே தவலைப்பானை, குத்துவிளக்கு என எதையாவது தூக்கிக்கொண்டு வருவாள். ஆச்சியிடமே அடகுவைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வாள். அதில் திருப்பாமலேயே போய்விட்ட பெரும்பாலானவை இன்னும் அரங்குவீட்டில் பழைய பாத்திரங்களோடு கிடக்கின்றன.

பள்ளிக்கூடத்திலும் நானும் பவுனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தினமும் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வருவான். வகுப்பிலும் என்னை மட்டும் தான் வாடா போடா என்று பேசுவான். மற்ற அனைவரையும் சமவயது பையன்கள் என்றாலும் 'ஐயா' என்று பேசுவான். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் அவனே அதைப்பற்றி என்னிடம் பேசினான்.

" டேய், எங்கம்மா என்னய திட்டுதுடா, உன்னயும் ஐயான்னுதான் கூப்பிடணுமாம்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. "

" அவங்க சொன்னாங்கன்னு என்னயல்லாம் அப்டி கூப்புடாதடா.. எனக்கு புடிக்காது.. " என்றேன்.

ம்ம் .. என்றபடி அமைதியாக இருந்தவன் " உனக்குத் தெரியுமா, மொதலியாருக வீடுகள்ளயே நான் வீட்டுக்குள்ள வரைக்கும் போனது உங்க வீட்ல மட்டும்தாண்டா, உங்க அம்மா மட்டும்தான் எனக்கு காப்பில்லாம் போட்டு குடுத்திருக்கு " என்றான்.

" அதுக்கென்னடா இப்போ, நீ வேற பேச்சு பேசுடா " என்றதும் அமைதியாகிவிட்டான். அதன்பிறகு நானோ அவனோ அப்படிப்பட்ட உரையாடலை எப்பொழுதும் பேச விரும்பவில்லை.

பவுனும் நன்றாக படித்தான் தான். எப்படியென்று தெரியவில்லை, ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டான். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை. எப்படியாவது பத்தாவதும் எழுதி, ஃபெயிலானாலும் பரவாயில்லை, ஏதாவது சர்க்கார் ஆபீஸ்ல பியூன் வேலையாவது வாங்கிவிடலாம் என்று மாடத்தி எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். ம்ஹூம்.. எதுவும் நடக்கவில்லை. பெயிலாகிவிட்ட பிறகு அதே பள்ளிக்கூடத்தில் போய் படிக்கவே மட்டேன் என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டான்.

வீட்டில் சும்மா இருந்தவனை அவனது மாமா அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் ஒரு பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் இராணுவ விடுதி ஒன்றில் துணி தேய்க்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஒருநாள் மாடத்தி வந்து சொன்னாள்.

இந்தமுறை வீட்டுக்கு வந்தவன் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், பொங்கல் முடிந்தவுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருப்பதாகவும், அதற்காகவே பொங்கலுடன் ஒருவாரம் லீவு சேர்த்து எடுத்திருப்பதாகவும் சொன்னான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நானும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னான்.

விஷயத்தைக் கேட்டு அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். பொதுவாக எங்கள் ஊரில் யாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களிலோ அவர்களும் எங்கள் வீட்டு விசேஷங்களிலோ கலந்துகொள்வதில்லை என்பதால் அம்மா பத்திரிக்கை வைப்பான் என்றோ கல்யாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை. மாடத்தியை என்றாவது கண்டால் எல்லாம் நல்ல படியாக நடந்ததா என்று கேட்டுக்கொள்வாள். ஆனாலும் நான் நிச்சயத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன். விடுமுறை கிடைத்தால் கல்யாணத்திற்கும் கண்டிப்பாக வருவதாகச் சொன்னேன். பவுனும் மிகவும் சந்தோசப்பட்டான்.

உட்கார்ந்து கதைபேசிகொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. " சர்டா, நான் வரட்டுமா " என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானவனை ஒரு நிமிடம் உள்ளே வாடா என்று அழைத்தேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு அரங்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த, நிறம் மங்கியிருந்த குத்துவிளக்கை அவன் கையில் கொடுத்து, தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் செய்யும்போது இதையும் பாலிஷ் செய்து கொடுத்துவிடு என்று சொன்னேன். அவனும் வேண்டாமென்று சொல்ல நினைத்து, பின் தயங்கி கையில் வாங்கிப் பார்த்தான். அந்த குத்துவிளக்கை அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கின் கீழ்த்தட்டில் சுற்றிலும்" மாடத்தி கல்யாணத்துக்கு தகப்பன் பெரியகருப்பன் சீர் குடுத்தது" என்று பெயர் வெட்டியிருந்தது.

அவன் ஆச்சரியமும் கேள்வியும் நிறைந்தவனாக என் முகத்தைப் பார்த்தபடியே அவனையும் அறியாமல் சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்தான்.

32 கேள்விகளும் எனது பதில்களும்..

12:46 PM Edit This 9 Comments »


என்னை தொடர் பதிவிற்கு அழைத்த அன்பு நண்பன் சகபதிவர், ஒளியவன் பாஸ்கருக்கு மிக்க நன்றி..
எனது பதில்கள் இனி ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
நானே எனக்கு வைத்துக்கொண்ட பெயரிது. எனக்கு கண்ணனை மிகவும் பிடித்தவன். கோகுலமும் அங்கே நடக்கும் ராசலீலையும் பிடிக்கும்.. ( தயவுசெய்து ராசலீலையின் உண்மையான அர்த்தம் தேடிப்புரியவும்..:))
என் பெயர் எனக்கு பிடிக்குமா: சொந்தபெயர் பூமாரி அந்தோணிராஜ். ஆரம்பத்தில் பூமாரி என்ற பெயர் அதிகம் பிடிக்காமல் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே என்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அப்பெயரை கொண்டாடியே வருகிறார்கள். இப்பொழுது பல நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்க பூமாரி என்ற என் சொந்த பெயரிலும் ஆங்கில, தமிழ் கவிதைகள் எழுதுகிறேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இரண்டு மாதங்களுக்கு முன். (மனிதர்கள் முன் பொதுவாக நான் அழுவதில்லை.. இருப்பினும் இப்படியொரு சில தவிர்க்க இயலாமல் போகிறது )
அது தவிர சர்ச், கோவில் சந்திதானங்களில் அழுகையை என்னால் அடக்க முடியாது. மேலும் அவ்விடங்களுக்கு வெகு தனியாகச் செல்வதே வழக்கம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடித்திருக்கிறது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
காரமில்லாத எந்த சைவ உணவு ஆனாலும் சரி..
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சாதம் பாசிப்பருப்புக் கூட்டு, கேரட் பொரியல், கீரை, பால்சோறு மற்றும் வறுத்த சுண்டை வத்தல் / மோர்மிளகாய்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதலில் தயங்குவேன். பழக ஆரம்பித்துவிட்டால் மிகவும் நன்றாக பழகுவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவிதான்.. அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .. அட அட..
கேள்வியில் ஆற்றையும் சேர்த்திருக்கலாம். தாமிரபரணி நாட்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.
தற்சமயம் வீட்டு நீச்சல்குளத்தில் இரவுகளில் நீந்தி சோர்வது மிகவும் பிடித்திருக்கிறது..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக பேச்சு.. கவனம்.. பந்தாவற்ற எளிமை..
நேருக்கு நேர் பேசும்போது, கண்கள்.. மற்றும் கண்முடிகள்.. சிகை அலங்காரம் கவனிப்பேன்..
வளைந்த கண்முடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. கண்களில் / முகத்தில் அழகே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது என் எண்ணம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
ரொம்ப பிடித்த விசயம்னா, கொஞ்சம் பயின்றிருக்கும் / பயின்று கொண்டிருக்கும் யோகம் / தியானம்
பிடிக்காதது : பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பக்கத்துல யாரும் இல்லாததுக்காக எப்பவுமே வருந்துறதில்லை. உலகத்துல வரும்போதும் தனியாத்தான் வந்தோம்.. போகும் போதும் அப்படித்தானுங்களே.
இக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத அம்மா பக்கத்துல நான் இருக்க முடியலைன்னுதான் கொஞ்சம் வருத்தம். அதும் அடுத்த கொஞ்சநாள்ள தீரப்போகுது.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இங்கே பின்னிரவு.. அணிந்திருக்கும் இரவாடையில் ஆறு வண்ணங்கள் இருக்கின்றன. அதில் அதிகமானது சிகப்பு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
இப்போதைக்கு பாடல் கேக்கல.. சுமார் 2 மணி நேரம் முன்பு நள்ளிரவில் கேட்ட கடைசி பாடலற்ற இசை 'White Mountain' - By Isha Yoga.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.. அதிலும் வழுக்கிக்கொண்டு எழுதும் கருப்பு பேனா. :)

14.பிடித்த மணம்?
நிறைய இருக்கு..
தாளிக்கும் வாசனை, மண்வாசனை, பெட்ரோல் வாசனை, நீலகிரி தைல வாசனை, கோவிலின் பூவும் கற்பூரமும் சேர்ந்து மணக்குமே அது, பூக்களில் மல்லிகை, லாவண்டர், ..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நளன் (குட்டி செல்வன்) : இணைய தோழன், கவிஞன், சகபதிவர், உடன்பிறவாத்தம்பி, நான் சென்னையில் வந்திறங்கியது தெரிந்தும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவட்டு ஓடிவந்தவன்.
பிடித்த விசயம் அவன் எழுத்து மற்றும் உணர்வு வெளிப்பாடு.. சிறு குழந்தைபோல் அழுவதும் அடுத்த கணமே நட்சத்திரங்களில் தாவித்தாவி விளையாடும் குழந்தைமையும் பிடிக்கும். அவனோடு பேசும் போதெல்லாம் நானும் குழந்தையாகவே மாறியிருக்கிறேன்.

மீறான் அன்வர் : இந்தியா செல்லும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமென நினைத்து முடியாமல் போன எங்கள் ஊர் நண்பர். ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாகவே இருக்கமுடியும் என்றால் அது நண்பர் மீறான் அன்வர் தான்.. எப்பொழுதும் பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும். அவர் இயற்கையை பார்க்கும் / கண்ணோட்டம் மிக அலாதியானது. ஒரு சிறு பூவினையும் நின்று ரசிக்க அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குற்றாலமலைச் சாரலின் சொந்தக்காரர். அன்பு நண்பர், சக பதிவர். கவிஞர். :)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒன்றல்ல.. நிறைய இருக்கிறது. அவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சமீபமாக வரும் கவிதைகளின் நடையும் மொழியும் கருத்தாழமும் என்னை மிகக் கவர்ந்தவை.அவரது உரையாடல்: சமூக இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது..

17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டில் ஆர்வமில்லை. சிறுவயதில் பள்ளியில் / தெருவில் விளையாடியதோடு சரி.
கணிதம் மற்றும் புதிர்களை தீர்ப்பது பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
14 வருடங்களுக்கு முன்பாக ஒரு வருடம் அணிந்திருந்தேன். அதன்பின் இல்லை.
(இப்போ ஒரு கூலர்ஸ் அணிகிறேன்.. நீங்க அதைக் கேக்கலை இல்லையா.. ! :) )

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நெஞ்சை நெகிழ வைக்கும், மனதோடு பேசும், உணர்வுகளைத் தயங்காது பேசும் அனைத்து உலகத் திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
கடந்த 3 தினங்களில் பார்த்தவை.. 10000 BC, Benjamin Button, Hotel for dogs and The water (Hindi)

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.
ஊரில் இருந்தவரை குற்றால சீசன் காலம் .. சீசனில் எங்கள் ஊரில் தூறிகொண்டே இருக்கும்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஷோபாசக்தியின் கொரில்லா மற்றும் 'Poems To Live By In Uncertain Times' Edited by Joan Murray.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வழக்கமாக மாற்றுவதில்லை.
அலுவலக லாப்டாப் என்பதால் விதிமுறைகளின்படி பீனிக்ஸ் பல்கலைக்கழக குறியீட்டுப்படம் தான் இருக்க வேண்டும், அதை மாற்றக்கூடாது எனினும் நான் வெகுநாட்களாக தனித்த வெள்ளைப் பூ ஒன்றின் படம் தான் வைத்திருக்கிறேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : உடுக்கை மற்றும் உருமி சத்தம், தபேலா (பாடல் கேட்கையில் தபேலாவின் சப்தத்தை மட்டும் மனம் பிடித்துக்கொண்டு நகரும்..) அமைதியான பொழுதில் கேட்கும் பல பறவைகளின் கலந்த சத்தம், தண்ணீர் சலசலத்தோடும் சத்தம், பாடல் வரிகளற்ற இசையின் சப்தம் (White Mountain, ...)

பிடிக்காதது : சாப்பிடும்போது யாராவது வாயில் சவ சவ என சப்தம் எழுப்பினால் அதன்பின் ஒருநாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அதேபோல் பானத்தை உறுப் உறுப்பெனெ உறிஞ்சும் சத்தமும் அறவே பிடிக்காது. No compromise in these things.. அதென்னவோ அப்படியே பழகிடுச்சு..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சென்ற வாரம் வரைக்கும் சொன்னால் பீனிக்ஸ், அரிசோனா மாகாணம்,
வார இறுதியையும் சேர்த்தால் சாண்டியாகோ, கலிஃபோர்னியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இப்போதைக்கு நான் நானாக இருக்கிறேன். தனித்திறமை என்றால் அதை வாழ்வின் கடைசியில் தான் சொல்ல இயலுமென நம்புகிறேன்..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..
There is nothing as good or bad in this world. All just exist.. - ஓஷோ

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.. சிறுவயதில் வீட்டில் கோபம் வந்து சண்டைபோட்டால் காளியம்மன் கோயில் சாமியாடியே தேவலை என அம்மா சொல்வார்கள்.. அவ்வளவு கோபமாக இருக்குமாம் என் முகம்..
கோபத்தை பெரும்பாலும் கொன்றுவிட்டேன். அதற்காக பலவருடங்களாக எனது உணவுப் பழக்கத்தையே முற்றும் மாற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் பல இடங்களில் படித்துவிட்டேன்.. கோபத்தைத் தவிர வேறு எதையும் (பெரும்பாலும்) யாரும் எழுதவில்லை ஏன்!? . :))

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குளிர்ந்த மலைப்பிரதேசம் எதுவானாலும், குறிப்பாக மூணாறு..
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் போக விரும்பும் இடம் கைலாஷ் - மானசரோவர்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பேரானந்தமாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
ம்ம்.. தெரியலியே...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
புதிர். அதை அவிழ்க்க வந்துதான் எதையெதையோ அவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றி.

சுயநினைவைத் தின்ற இரவு

4:25 PM Posted In Edit This 2 Comments »


தயங்கித் தயங்கி படரும் காலை
உட்புகும் மஞ்சளொளிக் கிரணங்களின் ஆசுவாசத்தில்
மிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம்
மரக்கிளைகள் அசைத்து
சாளரம் வழிப்புகும் காற்று அள்ளிச்செல்கிறது
அடைத்துக் கிடந்த மருந்து நெடியை
ஒவ்வொரு முறையும்
தேவதையின் வெண்சிறகுகள் வாங்கி வருகிறாள்
அன்பாய் கவனித்துப்போகும் செவிலிச் சகோதரி
சுயநினைவைத் தின்று சோர்ந்த இரவு
தூக்கம் கொளுத்திக் காய்ந்த வலிகள்
அர்த்தம் பிடிபடாத புலம்பல் வாக்கியங்கள்
புட்டம் பெருத்த மூதாட்டியாய்
அருகமர்ந்து அச்சமூட்டும் மருத்துவப் பெரு எந்திரங்கள்
தனதான நியாயங்களுடன்
துயில் கலைந்து எழுந்திராத அப்பாவின் போதை
கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகின்றன
இருள்நீளப் போராட்டத்தின் பின்
மீட்டுத் திரும்பிய நினைவில்
உறங்காத விழிகளைக் குறித்த கேள்விகளுடன்
என்னிடம் ஏதும் பேசாமலேயே
கண்ணயர்கிறாள் அம்மா

வார்த்தை மே மாத இதழில் வெளியான கவிதை.

தூசு படிந்த மௌனம்

11:41 AM Posted In Edit This 6 Comments »


வளைந்துகிடக்கின்ற தெரு
வெளியேறிப்போகும்
சாக்கடைப் பாலத்தினோரம்
தனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து
முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து
பின்னால் தாக்கியிருக்க வேண்டும்

திட்டுத்திட்டாய்த் தெரியும் வண்ணங்களில்
ஒட்டியிருக்கும் இளமையை
அழித்துக்கொண்டிருக்கின்றன
பயணங்களின் தூசுகள்
பின்சீட்டின் காலி மதுப்புட்டிகள்
கடந்துசென்ற போதைகளின்
சௌகரியங்களாக இருக்கக்கூடும்
உடைக்கப்பட்ட கண்ணாடியினுள்
கால்நீட்டி உறங்கலாம் பயணங்கள்
சீட்டுக் கீறல்களில் கசியும் கனவுகளுடன்

அன்றியும் பாலத்தில் முகம்திருப்பாது
கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
தனது இளமையின் நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ

நினைவுகளின் மீள்வாசிப்பு

12:19 PM Edit This 7 Comments »


கொட்டும்பனியிலும்
பறவைகளுக்கு உணவிட மறந்திராத
கருப்பு அங்கி மூதாட்டி
தாயின் மார்பில் சாய்ந்தபடி
தயங்கித் தயங்கி விழியுயர்த்தி
வெட்கிப் புன்னகைத்த சிறு குழந்தை
பூட்டிக்கொண்டிருந்த மின்னுயர்த்தி தடுத்து
புன்முருவலித்து எனையேற்றிக்கொண்ட
விரிந்த உதட்டு ஆப்பிரிக்க அழகி
அழுக்குச் சட்டையுடன் சிக்னலில்
உதவி கேட்டுக்கொண்டிருந்த
ஒற்றைக் கண் பிச்சைக்காரன்
இந்நள்ளிரவில் பலரையும் அழைத்துவந்து
கவிதையின் வார்த்தைகள் விலக்கி
அமரவைத்திருக்கிறேன்
பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்
என்னுடன் சேர்ந்து மீள்வாசிக்கின்றன
எழுதி முடித்த கவிதையை

ஒரு நேசத்தின் மிச்சம்

12:10 PM Posted In Edit This 4 Comments »


மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..

வெறுமைகளின் பயணம்

3:18 PM Edit This 7 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்
காடூடுறுவும் சிறுபாதையொன்றை
அழகாய்ப் பகிர்ந்திருந்தது
கைகள் கோர்த்த நம் நடை!

உன் சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது
தூரத்தில் இரைச்சலிட்ட காட்டாறும்
மென் கருமை பூசியிருந்த மாலைகளும்
நம் களிப்பிற்குச் சாட்சியாயிருந்தன
இவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்
நம் பயணங்கள் பிரிந்திருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை

பாரமான இலையுதிர்காலத்தின் நேரம்
நினைவுகளைச் சுருட்டி பிரிந்தோம்
சிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்
வெறுமைநோக்கி
வேகமாய் நடந்தபடியிருக்கின்றன கால்கள்!

பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

நீ வரப்போவதில்லையென

7:27 AM Posted In Edit This 9 Comments »


இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்

உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை

அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
உனை அணைத்துக்கொள்வதற்கென
சட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!

வலிகளில் தெரியும் முகம்

7:33 AM Posted In Edit This 7 Comments »


சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்

இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்!

நானும் காதலும் - 1

6:03 AM Posted In Edit This 7 Comments »


மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!

முகங்களின் பெருமை பேசி..

7:25 AM Edit This 15 Comments »தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்

அடையாளங்கள் வார்த்த
அச்சுமூலங்களின் முகக்கீறல்களை
கிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை

போர்த்தப்பட்ட அலங்காரங்களின்பின்னால்
ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது

தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்

அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!

சாளரம்

6:03 AM Edit This 18 Comments »இந்தச்சாளரம்
இப்பேருலகின் உட்செல்ல
எனக்கான வாசலாயிருக்கிறது

மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
இங்கிருந்தே என் கரங்களுக்கு
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
இளவெயிலின் புன்னகையுடனோ
என் அத்தியாவசிய முகங்கள்
இதன்வழியேதான்
எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

தொடர்வண்டி நிலைய இருக்கை

7:42 AM Edit This 9 Comments »


ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!

யாவரும் அறியாப்பொழுதில்
பிரிவைத்தாளாது ரகசியமாய்
வழிந்ததோர் கண்ணீர்த்துளி
உன்னில் மோதி
சிதறித்தெறித்திருக்கலாம்!

பேசிமுடித்த வார்த்தைகள் போக
எஞ்சிய ஓரிரண்டு
பகிர்வுகளின் திராணியற்று
உன்னில் கிறுக்கப்பட்டிருக்கலாம்

தொலைதூரம் பயணித்த
பல சுமைகளோ களைப்புகளோ
உன்னில் இறக்கிவைக்கப்பட்டு
ஆசுவாசப்பட்டிருக்கலாம்!

தாமதித்த மனிதர்களின் பொருட்டோ
வண்டிகளின் பொருட்டோ
கணிசமான இரவுகளில்
உனக்குத் துணை கிடைத்திருக்கலாம்
இல்லையுன் தனிமை பறிபோயிருக்கலாம்!

இருப்பினும்
இன்றும் வழமையாய்
உன் மடியில் புன்னகையுடனும்
பூக்களுடனும் காத்திருக்கின்றன
பிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்
புதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்!

வனாந்திரத்தின் நடுவே..

9:13 PM Edit This 9 Comments »


நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!
நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!
அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!
அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்
பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை
விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)

6:36 AM Edit This 16 Comments »வானின் வர்ணங்கள் மட்டும்
ரசிக்கும் நம் கண்களுக்கு
அதன் இதயத்தின் ஓட்டைகள்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்
மென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை
சல்லடையாய் அரித்துப்போனதையும்
அறியாதிருக்கிறோம்

உதயத்திலும் அந்தியிலும்
கண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை
ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்
நம் சந்ததிக்கு காத்திருப்பதையும்
நாம் உணர்ந்திருக்கவில்லை

வானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க
அதில் நனைந்துதுடிக்கும் குளிர்பாறைகள்
கண்ணீர் வடிக்கின்றன
வானம் கிழிக்கும் நாமோ
கரைந்துபோகுமொரு தோணியுடன்
சிறிதும் கவலையற்றிருக்கிறோம்

அவரவர் சுயங்களுடன் சுகமாயிருக்க
வெம்மையில் உலாவருமொரு நீர்ப்பறவை
தன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்
குடிக்கத்துணிகிறது நிலமனைத்தையும்

வெம்மையில் விரியுமொரு திரவப்போர்வையோ
தன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை
சுருட்டிக்கொள்ள முயல்கிறது

சூரியனும் பூமிப்பெண்ணின் மேல்
தன் மயிலிறகு முத்தங்கள் மறந்து
கோரமுகம்காட்டத் துணிந்தமைமைக்கு
அவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி!

பூமியின் கருப்பை வாசத்திலிருந்தபடியே
அவளின் நீர்க்குடம் உடைவதில்
சிறிதும் அக்கறையில்லாதிருந்தால் எப்படி?

வாருங்கள் மனிதர்களே!
பூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,
தாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்
சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை!

பிரிந்தும் பிரியாத நினைவுகள்

6:56 AM Posted In Edit This 15 Comments »


இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

8:08 AM Posted In Edit This 15 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!

தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்

இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்

சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்

அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்

மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!

போதை நிறைந்ததொரு பின்னிரவில்

12:04 PM Edit This 19 Comments »


நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்

அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று

நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே

அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை

மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று

தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று

ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று

இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று

ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது

பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று

இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
'இன்னுமா இறங்கல' என்கின்றான்.

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்

4:34 AM Edit This 29 Comments »சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'

கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'

கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...'

உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!