Welcome!


பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »



தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

12 comments:

அன்புடன் அருணா said...

//தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்//

வலிதான் எப்போதும் வாழ்க்கைச் சூட்சமங்களைக் கற்றுக் கொடுக்கின்றது...
அன்புடன் அருணா

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்கு உள்ளது...

கோகுலன் said...

//வலிதான் எப்போதும் வாழ்க்கைச் சூட்சமங்களைக் கற்றுக் கொடுக்கின்றது...

//

உண்மைங்க தோழி அருணா..
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்!!

கோகுலன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே வெங்கடேஸ்வரன்..

தமிழ் said...

/தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன் /

வலிகள் தான்
வாழ்க்கையை
வாழக் கற்றுத் தருகின்றன என்னும்
வரிகள் அருமை

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் வெங்கடேஸ்ரன் இல்லை... விக்னேஷ்வரன் :((

கோகுலன் said...

//நான் வெங்கடேஸ்ரன் இல்லை... விக்னேஷ்வரன் :((//

ஓ.. மன்னிக்கனும் நண்பா.. உங்களை மாதிரியே எனது பழைய அலுவலகத்தில் ஒரு நண்பர் இருந்தார்.. அவர் பெயர் வெங்கடேஸ்ரன்.. அதை நினைத்தபடியே மாற்றி டைப் செய்துட்டேன்.. :))

கோகுலன் said...

//வலிகள் தான்
வாழ்க்கையை
வாழக் கற்றுத் தருகின்றன என்னும்
வரிகள் அருமை//

கருத்துக்கு மிக்க நன்றிங்க திகழ்மிளிர்..

புதியவன் said...

//பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது
//

இப்போது தான் உங்கள் வலைப்பூ
அறிமுகம் கிடைத்தது...வாசித்து
வருகிறேன் உங்கள் கவிதைகளை...

அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள் கோகுலன்...

நட்புடன் ஜமால் said...

தேக்கிவைத்த வலிகள் எல்லாம் வரிகளாக.

அருமை

வாழ்த்துக்கள் கோகுலன்.

madhu said...

கோகுல்..

//இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்! //

பூஞ்சாரல் தூவும் வான்மேகம் வறண்டு
பாளமாய் வெடித்த தரை மேல்
நடக்கையில், சருகுகள் நொறுங்கும்
பாதையின் ஓரத்தில் மல்ரின் இதழ்களாய் சிறகசைக்கும் பட்டாம்பூச்சி போல எனக்குள் என்னவோ செய்கின்றன இந்த வரிகள் ..

நன்றி நண்பா..

இணையத்தின் தேடல் என் இதயத்தில் இணைந்திடும் நண்பன் ஒருவனைக் கொடுத்ததற்கு..

நன்றி.. நன்றி..

Divya said...

\\காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்\\


'சப்பாத்துக்கால்கள்' என்று ஒரு வார்த்தை இன்றுதான் கேள்வி படுகிறேன்.

தங்களின் கவிதை மிகவும் அருமை, வாழ்த்துக்கள்!!