முகங்களின் பெருமை பேசி..
7:25 AM Edit This 15 Comments »தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்
அடையாளங்கள் வார்த்த
அச்சுமூலங்களின் முகக்கீறல்களை
கிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை
போர்த்தப்பட்ட அலங்காரங்களின்பின்னால்
ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது
தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்
அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!