இயற்கை புனிதம்:
7:08 PM Posted In இயற்கை Edit This 8 Comments »அதிகாலை தோட்டத்தின் புல்வெளியில்
பனித்துளிகள் மிதந்திருக்க நான்கண்டேன்
மதிநிறைந்த இரவென்னும் கன்னியவள்
கால்கொலுசின் முத்துகள்தான் சிந்தினவோ?
குதித்தோடும் முழுமதியும் முன்னிரவில்
சிரிப்பொலியை சிதறித்தான் சென்றதுவோ?
கதிரவனும் கிழக்கெழவே நானுணர்ந்தேன்
அவையனைத்தும் முத்தல்ல வைரமென்று!
செங்கதிரோன் வெண்கதிர்கள் சிதறிவிழ
பனித்துளியை பட்டைதீட்டி வைத்தவன் யார்?
தீங்கில்லா பைம்புற்கள் ஒவ்வொன்றும்
வைரமதை முடிதாங்கி நிற்குதுபார்!
தாங்குகின்ற வெயிலவனின் காமமதில்
வைரமெல்லாம் மெள்ளமெள்ள கரைந்தபடி
பாங்குடனே இயற்கையரங் கேற்றுகின்ற
வைகறையின் புணர்ச்சியது என்னேயழகு!
சிறகசைத்து பறந்துவரும் பட்டாம்பூச்சி
பனித்துளியை முத்தமிட துடிக்குதுகாண்
பறவைகளில் சக்ரவாகம் அதனைப்போலே
மனமிங்கே பனித்துளிக்காய் ஏங்கிடுதே!
அறங்களிலே சிறந்ததொன்று அன்புசெய்தல்
இயற்கையின் மேலதுமட்டும் விதிவிலக்கோ?
உறவுகளில் தாய்மைபோலெ இயற்கைபுனிதம்
அதனையறியாமல் இவ்வுலகில் வாழ்க்கைவீணே!