Welcome!


ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)

6:36 AM Edit This 16 Comments »வானின் வர்ணங்கள் மட்டும்
ரசிக்கும் நம் கண்களுக்கு
அதன் இதயத்தின் ஓட்டைகள்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்
மென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை
சல்லடையாய் அரித்துப்போனதையும்
அறியாதிருக்கிறோம்

உதயத்திலும் அந்தியிலும்
கண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை
ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்
நம் சந்ததிக்கு காத்திருப்பதையும்
நாம் உணர்ந்திருக்கவில்லை

வானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க
அதில் நனைந்துதுடிக்கும் குளிர்பாறைகள்
கண்ணீர் வடிக்கின்றன
வானம் கிழிக்கும் நாமோ
கரைந்துபோகுமொரு தோணியுடன்
சிறிதும் கவலையற்றிருக்கிறோம்

அவரவர் சுயங்களுடன் சுகமாயிருக்க
வெம்மையில் உலாவருமொரு நீர்ப்பறவை
தன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்
குடிக்கத்துணிகிறது நிலமனைத்தையும்

வெம்மையில் விரியுமொரு திரவப்போர்வையோ
தன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை
சுருட்டிக்கொள்ள முயல்கிறது

சூரியனும் பூமிப்பெண்ணின் மேல்
தன் மயிலிறகு முத்தங்கள் மறந்து
கோரமுகம்காட்டத் துணிந்தமைமைக்கு
அவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி!

பூமியின் கருப்பை வாசத்திலிருந்தபடியே
அவளின் நீர்க்குடம் உடைவதில்
சிறிதும் அக்கறையில்லாதிருந்தால் எப்படி?

வாருங்கள் மனிதர்களே!
பூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,
தாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்
சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை!

பிரிந்தும் பிரியாத நினைவுகள்

6:56 AM Posted In Edit This 15 Comments »


இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

8:08 AM Posted In Edit This 15 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!

தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்

இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்

சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்

அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்

மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!

போதை நிறைந்ததொரு பின்னிரவில்

12:04 PM Edit This 19 Comments »


நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்

அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று

நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே

அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை

மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று

தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று

ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று

இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று

ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது

பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று

இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
'இன்னுமா இறங்கல' என்கின்றான்.