Welcome!


ஒரு நேசத்தின் மிச்சம்

12:10 PM Posted In Edit This 4 Comments »


மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..

வெறுமைகளின் பயணம்

3:18 PM Edit This 7 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்
காடூடுறுவும் சிறுபாதையொன்றை
அழகாய்ப் பகிர்ந்திருந்தது
கைகள் கோர்த்த நம் நடை!

உன் சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது
தூரத்தில் இரைச்சலிட்ட காட்டாறும்
மென் கருமை பூசியிருந்த மாலைகளும்
நம் களிப்பிற்குச் சாட்சியாயிருந்தன
இவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்
நம் பயணங்கள் பிரிந்திருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை

பாரமான இலையுதிர்காலத்தின் நேரம்
நினைவுகளைச் சுருட்டி பிரிந்தோம்
சிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்
வெறுமைநோக்கி
வேகமாய் நடந்தபடியிருக்கின்றன கால்கள்!