Welcome!


தூசு படிந்த மௌனம்

11:41 AM Posted In Edit This 6 Comments »


வளைந்துகிடக்கின்ற தெரு
வெளியேறிப்போகும்
சாக்கடைப் பாலத்தினோரம்
தனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து
முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து
பின்னால் தாக்கியிருக்க வேண்டும்

திட்டுத்திட்டாய்த் தெரியும் வண்ணங்களில்
ஒட்டியிருக்கும் இளமையை
அழித்துக்கொண்டிருக்கின்றன
பயணங்களின் தூசுகள்
பின்சீட்டின் காலி மதுப்புட்டிகள்
கடந்துசென்ற போதைகளின்
சௌகரியங்களாக இருக்கக்கூடும்
உடைக்கப்பட்ட கண்ணாடியினுள்
கால்நீட்டி உறங்கலாம் பயணங்கள்
சீட்டுக் கீறல்களில் கசியும் கனவுகளுடன்

அன்றியும் பாலத்தில் முகம்திருப்பாது
கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
தனது இளமையின் நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ

6 comments:

ஆயில்யன் said...

//கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
தனது இளமையின் நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்//

நிச்சயம் புறக்கணிக்கப்பட்ட எந்தவொரு உயிரும், உயிரற்ற பொருளும் கூட நிச்சயம் நினைக்கும் புறக்கணிப்பின் வலியினை! :(

நட்புடன் ஜமால் said...

மகிழ்வுந்து\\ வார்த்தை அழகு


முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து \\ இரசித்தேன்

மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும் \\

மெளனமே பல நேரங்களில் செளகரியம் ...

காதலானாலும் வலியானாலும் ...

புதியவன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு கோகுலன்...

Gowripriya said...

இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ

அருமை

ny said...

one more from u :))

கோகுலன் said...

பின்னூட்டமிட்ட அன்பு நண்பர்கள்

ஆயில்யன்
ஜமால்
புதியவன்
கௌரிப்ரியா
வண்ணத்துப்பூச்சியார்
kartin

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

தங்களின் கருத்தையும் நேரப் பகிர்வையும் பாராட்டுகிறேன்.