Welcome!


பங்கு கேளு அய்யனாரே,

3:14 PM Posted In Edit This 1 Comment »










அய்யனாரே,

நேற்றுவரை
கருவேலங்காட்டில்
நிழலுக்காய் உன் சிலையடியில்
ஒதுங்கிய ஆடுகள்,
இன்று உன் முன்னாலே
வெட்டப்படுகின்றன

உனக்குப் படையலாம்,

யாராருக்கு எது தின்ன ஆசையோ
அதற்கெல்லாம் நீ தான்
நல்லதொரு ஊமைக்காரணம்

கேட்டால்,
கொடுமைகளைக் கொல்பவனாம் நீ.
பச்சைரத்தம் குடிப்பவனாம் நீ
தவறான மனிதர்களின்
தவறான புரிதல்கள்!

வாயில்லாத ஆடு
கொடுமையாகவும் தெரியவில்லை
படைத்த இரத்ததை நீ
குடித்ததாகவும் தெரியவில்லை

இதுவரை காவல் காத்தாய்,
கொடுமைகளை ஊருக்குள் விடாமல்,
இனியும் காவலிரு,
கொடுமைகள் வெளியே
சென்றுவிட வேண்டாம்.

நீ காவல்காரன் தான்.
உன்னை நீ காத்துக்கொண்டாய்,
ஊருக்கு வெளியே,
மனிதரிடம் விலகி.

கொட்டுமேளத் திருவிழாக்கள்,
சாராய ஆட்டங்கள்,
பலிகள் பல, படையல் பல,
ஒருமுறை நேரில்வா,
பாதி ஆடு பங்கு கேள்,

அன்றுமுதல்
ஆடுகள் வெட்டப்படும்,
அவனவன் வீட்டு
அடுக்ககளையில்.

ஆழிப்பேரலை

1:00 PM Posted In Edit This 0 Comments »


கோயில்குளம் கண்டதில்லை
கோபுரங்கள் வணங்கவில்லை
கோலக் கடத்தாயே - உனை
கொஞ்சமா வணங்கி நின்றோம்?
கொஞ்சவந்த பிள்ளையிடம் - ஏன்
கோரமுகம் காட்டிவிட்டாய்?

விதைத்தது விளைந்தது மற்றும்
வளர்ந்ததையும் கொண்டுசென்று
புதைக்கவும் மனமின்றி - ஏன்
வழியெல்லாம் இறைத்துவிட்டாய்?
கதைக்கின்றேன் கடல்த்தாயே - உனைவிட
சிசுக்கொலையும் சிறந்ததடி.

நாளும் உன்வீடு வந்தோம்
வளம்பல அள்ளிவந்தோம்
தாய்வீட்டு சீதனம் இதுவென - நாம்
மார்தட்டி கொண்டுவந்தோம்
திடுடனென நினைத்தாயோ - எமை?
வாளேந்தி வந்துவிட்டாய் வாசலுக்கே!

பச்சைரத்தம் வேண்டுமென்று என்காதில்
பக்குவமாய்ச் சொல்லிவிட்டால்
பாவியென் கழுத்தறுத்து - தேவி
பலியுடனே படையல் வைப்பேன்
நெற்பயிரில் யானையென - நீ
மேற்கே கிழக்காய் பேயாடிவிட்டாயே!

வஞ்சமில்லா பிஞ்சுகளும் உன்மடியில் அவை
கட்டிய மணற்கோட்டைகளும்
வாஞ்சையுடன் ஆயிரமாய் மக்கள்பலர் - அவர்
கட்டிய மனக்கோட்டைகளும்
பூஞ்சைபடிந்த உன்வயிற்றில் - சிக்கி
அழுகித்தான் போனதுவோ?

கரம்பிடித்த மனையெங்கே பயத்தில்
கால்பிடித்த பிள்ளையெங்கே?
பிள்ளையின் இறுதிமுகம் பார்க்கவும் வழியின்றி
உயிர்விடும் அவலம் இங்கே
கடல்தாயே ஒன்றுசொல்வேன் உண்மை - இன்று
நான் அனாதைப் பிணமல்ல..

என்னுடன் ஆயிரமாய் மேலும் கீழும்
பிணக்குவியல்கள்........




தாண்டவம் ஆடிவிட்டு - இங்கு
அமைதியாய் தவழ்கிறேன் என்றே
கண்டிடும் மாந்தரெல்லாம் - எனை
வெறுப்புடனே முறைக்கின்றார்

கண்ணீர் வந்தால்கூட - பாவி
கடல்மட்டம் உயருமென்றே
தொண்டைக் குழியிலே - என்
துக்கமெல்லாம் கொட்டிவைத்து
அடிமனதில் அழும்சத்தம் - அங்கு
யாருக்கும் கேட்கலியா?

தடுக்கி விழுந்தேனென - தலையடித்து
கதறிடும் ஓர்சத்தம்
சத்திய வார்த்தைகளாய் - உன்காதில்
சங்கொலியாய்க் கேட்கலியா?

ஓருயிரை பறிகொடுத்தால்
உயிர்விடும் தாயொருத்தி
ஆயிரமாய் பலிகொண்டால்
அடுத்தகணம் தீக்குளிப்பாள்
அடிவயிற்றில் உள்ள உயிர்
ஆயிரங்கள் கோடியம்மா..

பாவம்தீர இந்தத்தாயும்
எப்படித்தான் தீக்குளிப்பாள்?

நிலவு

11:56 AM Posted In Edit This 0 Comments »


தனிமைக் கவிதையை
நான் என்னுடன்
வாசிக்கும் பொழுதெல்லாம்
எட்டிப்பார்த்து வாசித்தபடி,
அந்த நிலவு.

இயற்கை ஓவியங்கள்

7:51 PM Edit This 0 Comments »
தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள்
தாங்கினவையாய் இருக்கின்றன
இங்கேயுள்ள முகங்களனைத்தும்

ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும்
ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும்
யாவருக்கும் அதில் உடன்பாடில்லை

தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீண்ட நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும்
கிழித்துப்பார்க்கிறேன்

வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்திருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!

அம்மாவுக்கு..

7:44 PM Posted In Edit This 1 Comment »





















தாயுந்தன் துன்பங்களை நானின்று நினைக்கையிலே
நெஞ்சினிலே நெருஞ்சிமுள் நெருக்கென்று தைக்கிறது
காலெட்டா வயதினிலே தறியிறங்கி பணிசெய்தாய்
நூல்தொட்டா அறுந்துவிடும் அதுதிரித்து துணிநெய்தாய்!

விளையாடும் வயதினிலே ஓடோடி உழைத்துநின்றாய்
தாய்வீட்டுக் கடனடைக்க ஓடாய்நீ தேய்ந்துநின்றாய்
தம்பிதங்கை வளர்த்திடவே கல்விதனை இழந்துநின்றாய்
அச்சிறு வயதினிலே அன்னையாய்நீ மாறிநின்றாய்!

குடிகார கணவனுடன் நல்வாழ்வு வாழ்ந்திடவே
குடிபுகும் புதுமனையில் பொறுமைதான் கொண்டுவந்தாய்
மாமியார் வசவுக்கெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டாய்
மக்களெம்மை பெற்றுநீயும் பண்புடனே வளர்த்துவிட்டாய்!

காலினிலே நெஞ்சினிலே நோய்நொடிகள் தைத்துநிற்க
மனங்கொண்ட தைரியத்தால் அத்தனையும் வென்றுவந்தாய்
பிள்ளைகளும் ஆளாகி குடும்பமென ஆகிவிட்டோம்
ராணியென வைத்திடவே நாங்களின்று ஆசைகொண்டோம்

நல்லசோறு தின்னவில்லை நீநல்லதுணி கட்டவில்லை
இன்றதற்கு வழியிருக்கு இஷ்டம்போல் வாழென்றால்
உந்தனையும் வாழ்வினையும் இருக்கூறாய்ப் பிரித்தபடி
விதியின் பேர்சொல்லி நோய்நொடிகள் தடுக்குதம்மா

சந்தோசம் எனும்சொல்லை எட்டநின்று காணலன்றி
உந்தோசம் நீங்கும்வரை உவப்புடன்நீ குளித்ததில்லை
கணக்கில்லா கஷ்டத்திலும் இப்பொழுதும் சொல்கிறாய்
"எனக்கென்ன குறைச்சல், முத்துப்போல் மூணுபிள்ளை!"