Welcome!


உறவுகள்

7:18 PM Posted In Edit This 2 Comments »
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய
என்னுடைய வீட்டில்
நலம் விசாரிக்கும் பொருட்டு
அதிகமாகவே குழுமின
கிராமத்து உறவுகள்

நலம் விசாரித்து செல்லும் பொழுதில்
கொண்டுவந்த வெளிநாட்டு பொருள்கேட்டு
தலை சொரிய மட்டும்
எந்த உறவும் மறக்கவேயில்லை

கொண்டுவந்த பொருள் எல்லாம்
கரைந்தபின் பர்சும்
காலியாகிக்கொண்டிருந்தது
உறவுகள் உரிமையோடு கேட்ட
குவாட்டர்களுக்காகவும்!

தினமும் தொடர்ந்த செலவு
ஒருநாள் மறுக்கப்பட
வாசல் இறங்கிச் செல்ல்லும்
உறவுகளின் என்னை பற்றியான
விமர்சனம் காதில் கேட்கிறது

இவனப்பத்தி தெரியாதா?

முற்றத்து உறக்கம்

7:22 PM Posted In Edit This 0 Comments »
தென்றலின் தாலாட்டுக்கும்
நிலவின் குளுமைக்கும் மயங்கியே
என் முற்றத்து உறக்கம்

பனிவிழ ஆரம்பித்துவிட்ட
பின்னிரவில் என்னை எழுப்புகிறது
தூரத்தில் கேட்கும்
குடுகுடுப்பைக்காரனின்
ஜோசியக்குரல்!

எழுந்து வீட்டுக்குள்
செல்ல இயலாத
என்னுடைய இதயம்
துடிக்கிறது உச்சத்தொனியில்..
முட்டிக்கொண்ட சிறிநீரையும்
பொருட்படுத்தாமல்

கிழிந்த போர்வைக்குள்
காற்று புகவும் விடாமல்
கண்களை இறுக மூடி
குறுகி படுத்திருக்க
என்னை அதிகமாய்
நடுங்க செய்கிறது
குளிருடன் கலந்து விட்ட பயம்

நாய்கள் எல்லாம் எங்கே?
வாயை கட்டியிருப்பானோ?
வியர்வையைத்தான் வரவழைத்தன
அடுக்கடுக்கான கேள்விகள்

தூரத்து புகைவண்டி சத்தத்தையும்
ஆக்கிரமித்திருந்தது
என்னை நெருங்கிய
குடுகுடுப்பை குரல்

இதய துடிப்பின் விளிம்பில்
அறுந்து போக இருந்த உயிரை
கையில் எடுத்துக்கொண்டு
என் பெயர் சொல்லி அழைத்தபடி
கதவு திறந்தாள் அம்மா!

கைமணம்

7:16 PM Posted In Edit This 1 Comment »
புடைத்து புடைத்து
கல்பொறுக்க பயன்பட்ட முறமும்
தூக்கி வீசப்பட்டது
போன போகியுடன்

சோளங்குத்த ஆளில்லாத
உலக்கை
பரணுக்கு சென்றுவிட்டபின்
மூளியாய்க் கிடக்கிறது
உரல்

அடுக்களையில்
கரிபிடித்த
கடுகு டப்பாக்களை
இடம் பெயர்த்திருக்கிறது
பளபள கண்ணாடி குவளைகள்

அம்மாவின் கைமணம் மட்டும்
கருகிப்போய்விடவில்லை
என சொல்வதற்காய்
ஸ்டவ் அடுப்பில்
அடிக்கடி குளிர் காய்கிறது
அம்மா பத்திரமாய் பாதுகாக்கும்
பழைய மண்சட்டி