Welcome!


சுயநினைவைத் தின்ற இரவு

4:25 PM Posted In Edit This 2 Comments »


தயங்கித் தயங்கி படரும் காலை
உட்புகும் மஞ்சளொளிக் கிரணங்களின் ஆசுவாசத்தில்
மிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம்
மரக்கிளைகள் அசைத்து
சாளரம் வழிப்புகும் காற்று அள்ளிச்செல்கிறது
அடைத்துக் கிடந்த மருந்து நெடியை
ஒவ்வொரு முறையும்
தேவதையின் வெண்சிறகுகள் வாங்கி வருகிறாள்
அன்பாய் கவனித்துப்போகும் செவிலிச் சகோதரி
சுயநினைவைத் தின்று சோர்ந்த இரவு
தூக்கம் கொளுத்திக் காய்ந்த வலிகள்
அர்த்தம் பிடிபடாத புலம்பல் வாக்கியங்கள்
புட்டம் பெருத்த மூதாட்டியாய்
அருகமர்ந்து அச்சமூட்டும் மருத்துவப் பெரு எந்திரங்கள்
தனதான நியாயங்களுடன்
துயில் கலைந்து எழுந்திராத அப்பாவின் போதை
கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகின்றன
இருள்நீளப் போராட்டத்தின் பின்
மீட்டுத் திரும்பிய நினைவில்
உறங்காத விழிகளைக் குறித்த கேள்விகளுடன்
என்னிடம் ஏதும் பேசாமலேயே
கண்ணயர்கிறாள் அம்மா

வார்த்தை மே மாத இதழில் வெளியான கவிதை.

2 comments:

நட்புடன் ஜமால் said...

மிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம் \\

அள்ளிச்செல்கிறது
அடைத்துக் கிடந்த மருந்து நெடியை\\

நல்லாயிருக்கு.

(ஆஸ்பத்திரியோ ...)

ny said...

அழகிய மென் தாக்கம் !!