Welcome!


தூசு படிந்த மௌனம்

11:41 AM Posted In Edit This 6 Comments »


வளைந்துகிடக்கின்ற தெரு
வெளியேறிப்போகும்
சாக்கடைப் பாலத்தினோரம்
தனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து
முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து
பின்னால் தாக்கியிருக்க வேண்டும்

திட்டுத்திட்டாய்த் தெரியும் வண்ணங்களில்
ஒட்டியிருக்கும் இளமையை
அழித்துக்கொண்டிருக்கின்றன
பயணங்களின் தூசுகள்
பின்சீட்டின் காலி மதுப்புட்டிகள்
கடந்துசென்ற போதைகளின்
சௌகரியங்களாக இருக்கக்கூடும்
உடைக்கப்பட்ட கண்ணாடியினுள்
கால்நீட்டி உறங்கலாம் பயணங்கள்
சீட்டுக் கீறல்களில் கசியும் கனவுகளுடன்

அன்றியும் பாலத்தில் முகம்திருப்பாது
கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
தனது இளமையின் நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ

நினைவுகளின் மீள்வாசிப்பு

12:19 PM Edit This 7 Comments »


கொட்டும்பனியிலும்
பறவைகளுக்கு உணவிட மறந்திராத
கருப்பு அங்கி மூதாட்டி
தாயின் மார்பில் சாய்ந்தபடி
தயங்கித் தயங்கி விழியுயர்த்தி
வெட்கிப் புன்னகைத்த சிறு குழந்தை
பூட்டிக்கொண்டிருந்த மின்னுயர்த்தி தடுத்து
புன்முருவலித்து எனையேற்றிக்கொண்ட
விரிந்த உதட்டு ஆப்பிரிக்க அழகி
அழுக்குச் சட்டையுடன் சிக்னலில்
உதவி கேட்டுக்கொண்டிருந்த
ஒற்றைக் கண் பிச்சைக்காரன்
இந்நள்ளிரவில் பலரையும் அழைத்துவந்து
கவிதையின் வார்த்தைகள் விலக்கி
அமரவைத்திருக்கிறேன்
பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்
என்னுடன் சேர்ந்து மீள்வாசிக்கின்றன
எழுதி முடித்த கவிதையை

ஒரு நேசத்தின் மிச்சம்

12:10 PM Posted In Edit This 4 Comments »


மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..

வெறுமைகளின் பயணம்

3:18 PM Edit This 7 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்
காடூடுறுவும் சிறுபாதையொன்றை
அழகாய்ப் பகிர்ந்திருந்தது
கைகள் கோர்த்த நம் நடை!

உன் சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது
தூரத்தில் இரைச்சலிட்ட காட்டாறும்
மென் கருமை பூசியிருந்த மாலைகளும்
நம் களிப்பிற்குச் சாட்சியாயிருந்தன
இவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்
நம் பயணங்கள் பிரிந்திருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை

பாரமான இலையுதிர்காலத்தின் நேரம்
நினைவுகளைச் சுருட்டி பிரிந்தோம்
சிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்
வெறுமைநோக்கி
வேகமாய் நடந்தபடியிருக்கின்றன கால்கள்!

பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »



தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

நீ வரப்போவதில்லையென

7:27 AM Posted In Edit This 9 Comments »


இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்

உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை

அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
உனை அணைத்துக்கொள்வதற்கென
சட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!

வலிகளில் தெரியும் முகம்

7:33 AM Posted In Edit This 7 Comments »


சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்

இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்!

நானும் காதலும் - 1

6:03 AM Posted In Edit This 7 Comments »


மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!

முகங்களின் பெருமை பேசி..

7:25 AM Edit This 15 Comments »



















தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்

அடையாளங்கள் வார்த்த
அச்சுமூலங்களின் முகக்கீறல்களை
கிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை

போர்த்தப்பட்ட அலங்காரங்களின்பின்னால்
ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது

தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்

அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!

சாளரம்

6:03 AM Edit This 18 Comments »



















இந்தச்சாளரம்
இப்பேருலகின் உட்செல்ல
எனக்கான வாசலாயிருக்கிறது

மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
இங்கிருந்தே என் கரங்களுக்கு
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
இளவெயிலின் புன்னகையுடனோ
என் அத்தியாவசிய முகங்கள்
இதன்வழியேதான்
எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

தொடர்வண்டி நிலைய இருக்கை

7:42 AM Edit This 9 Comments »






















ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!

யாவரும் அறியாப்பொழுதில்
பிரிவைத்தாளாது ரகசியமாய்
வழிந்ததோர் கண்ணீர்த்துளி
உன்னில் மோதி
சிதறித்தெறித்திருக்கலாம்!

பேசிமுடித்த வார்த்தைகள் போக
எஞ்சிய ஓரிரண்டு
பகிர்வுகளின் திராணியற்று
உன்னில் கிறுக்கப்பட்டிருக்கலாம்

தொலைதூரம் பயணித்த
பல சுமைகளோ களைப்புகளோ
உன்னில் இறக்கிவைக்கப்பட்டு
ஆசுவாசப்பட்டிருக்கலாம்!

தாமதித்த மனிதர்களின் பொருட்டோ
வண்டிகளின் பொருட்டோ
கணிசமான இரவுகளில்
உனக்குத் துணை கிடைத்திருக்கலாம்
இல்லையுன் தனிமை பறிபோயிருக்கலாம்!

இருப்பினும்
இன்றும் வழமையாய்
உன் மடியில் புன்னகையுடனும்
பூக்களுடனும் காத்திருக்கின்றன
பிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்
புதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்!

வனாந்திரத்தின் நடுவே..

9:13 PM Edit This 9 Comments »






















நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!
நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!
அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!
அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்
பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை
விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)

6:36 AM Edit This 16 Comments »



வானின் வர்ணங்கள் மட்டும்
ரசிக்கும் நம் கண்களுக்கு
அதன் இதயத்தின் ஓட்டைகள்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்
மென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை
சல்லடையாய் அரித்துப்போனதையும்
அறியாதிருக்கிறோம்

உதயத்திலும் அந்தியிலும்
கண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை
ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்
நம் சந்ததிக்கு காத்திருப்பதையும்
நாம் உணர்ந்திருக்கவில்லை

வானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க
அதில் நனைந்துதுடிக்கும் குளிர்பாறைகள்
கண்ணீர் வடிக்கின்றன
வானம் கிழிக்கும் நாமோ
கரைந்துபோகுமொரு தோணியுடன்
சிறிதும் கவலையற்றிருக்கிறோம்

அவரவர் சுயங்களுடன் சுகமாயிருக்க
வெம்மையில் உலாவருமொரு நீர்ப்பறவை
தன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்
குடிக்கத்துணிகிறது நிலமனைத்தையும்

வெம்மையில் விரியுமொரு திரவப்போர்வையோ
தன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை
சுருட்டிக்கொள்ள முயல்கிறது

சூரியனும் பூமிப்பெண்ணின் மேல்
தன் மயிலிறகு முத்தங்கள் மறந்து
கோரமுகம்காட்டத் துணிந்தமைமைக்கு
அவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி!

பூமியின் கருப்பை வாசத்திலிருந்தபடியே
அவளின் நீர்க்குடம் உடைவதில்
சிறிதும் அக்கறையில்லாதிருந்தால் எப்படி?

வாருங்கள் மனிதர்களே!
பூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,
தாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்
சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை!

பிரிந்தும் பிரியாத நினைவுகள்

6:56 AM Posted In Edit This 15 Comments »










இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

8:08 AM Posted In Edit This 15 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!

தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்

இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்

சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்

அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்

மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!

போதை நிறைந்ததொரு பின்னிரவில்

12:04 PM Edit This 19 Comments »


நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்

அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று

நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே

அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை

மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று

தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று

ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று

இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று

ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது

பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று

இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
'இன்னுமா இறங்கல' என்கின்றான்.

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்

4:34 AM Edit This 29 Comments »



சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'

கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'

கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...'

உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!

இரண்டற கலத்தலென்பது..

10:45 AM Posted In Edit This 12 Comments »



கிழியாத வானம் போல்
பிரியாத உறவு
இந்த இணைபுறாக்களுடையது

ஒன்றாய் பறக்கையிலும்
ஒன்றின் இறகு
விசிறித்தரும் காற்றே
மற்றொன்றின் சுவாசம்

இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்

இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்

மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்

இன்று காலையில் பறந்த
உண்டிவில் கல்லொன்று
ஒன்றின் உயிரை பறித்துப்போக,
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது
தனியான மற்றொன்று

இறக்கும் வரை இணைந்தேயிருக்கும்
தெய்வீக காதலரின் முன்னால்
இவையோ இறந்தபின்னும்
இணைந்திருந்தன

அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!

அந்தரங்கம் அறிதலென்பது..

9:08 PM Edit This 23 Comments »



அடுத்தவரின் அந்தரங்கமறிய
ஆசையில்லாதவர்
யாருமில்லையிங்கு!

சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்!

ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!

செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!

நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,

அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!

யாருமற்றதொரு பொழுதில்

2:41 PM Edit This 19 Comments »


அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!

- - o 0 o - -

வீடுமுழுவதும் நிறைந்துகிடக்கும்
மௌனத்தின் திடத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது
குளியலறையில் சொட்டுகின்ற
திரவக்கவிதை!

- - o 0 o - -

முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!

- - o 0 o - -

சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..

- - o 0 o - -

பின்முற்றத்தில்
காக்கைக்கு வைக்கப்பட்ட சாதத்தில்
அமைதியாய் மொய்த்துக்கிடக்கின்றன
உன் நினைவுகளையொத்த எறும்புகள்!

- - o 0 o - -