Welcome!


போதை நிறைந்ததொரு பின்னிரவில்

12:04 PM Edit This 19 Comments »


நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்

அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று

நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே

அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை

மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று

தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று

ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று

இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று

ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது

பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று

இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
'இன்னுமா இறங்கல' என்கின்றான்.

19 comments:

MSK / Saravana said...

இன்னுமா இறங்கல ?????
;)

MSK / Saravana said...

புலால் உண்ணாமை நன்றே..

MSK / Saravana said...

கவிதை நன்றாக இருக்கிறது..

வாழ்த்துக்கள்..

:)
:)

Natchathraa said...

வழக்கம் போல அழகான கவிதை...
இயற்கையினை மனிதன் அழிக்கும் கொடுமையினை அழகாய், வெகு நாசூக்காக சொல்லிய விதம் உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு....

வாழ்த்துகள் நண்பா...

அன்புடன்

நட்சத்திரா...

தமிழ் said...

படிக்க படிக்க
பாரமாகிறது மனது
படமும் தான்

Kavinaya said...

//இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று//

தன்னால் முடியுமென்று முடிந்ததெல்லாம் சீரழிக்கும் மனிதனின் மமதையை மனதில் உறைக்கும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் கோகுலன்.

ஹேமா said...

மனிதத்தைத் தட்டியெழுப்ப மீன்கூட முயற்சிக்கிறது.மனிதன் இன்னும் போதையில்தான்.

ராமலக்ஷ்மி said...

மீனின் கேள்விக்கு பதிலில்லை.
மீனுண்ணாமல் வாழ்வில்லையென
வாழும் மனிதரிடன் இதைச்சொல்ல
நமக்கும் தெம்பில்லை-சொன்னால்
சொல்வார் "இன்னும் இறங்கல":(!

அருமையான கவிதை கோகுலன்.
அடிக்கடி எழுதுங்கள். புதிதாக எழுதியிருக்கிறீர்களா என அடிக்கடி வந்து என்னைப் போல் எத்தனை பேர் வந்து பார்த்துச் செல்கிறார்களோ!

M.Rishan Shareef said...

கவிதை அழகு.
இறுதிவரிகளில் கவிதையின் முழுபாரத்தையும் ஏற்றியிருக்கின்றாய்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுது நண்பா :)

கோகுலன் said...

ரொம்ப நன்றீங்க சரவணன்...

கோகுலன் said...

வழக்கமான உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டம்.. நன்றிகள் நட்சத்ரா!!

கோகுலன் said...

நன்றீங்க தோழி திகழ்மிளிர்!!

கோகுலன் said...

நன்றீங்க தோழி திகழ்மிளிர்!!

கோகுலன் said...

//தன்னால் முடியுமென்று முடிந்ததெல்லாம் சீரழிக்கும் மனிதனின் மமதையை மனதில் உறைக்கும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள். //

நன்றிகள் கவிநயா!!

ஆனால், இதை ஏற்றுக்கொள்பவர்களை விட எதிர்ப்பவர்கள் தாம் அதிகம்.. புலால் உண்ணும் ஆசையில் தன் தரப்பு நியாயத்தை பேசி எத்தனை பேர் என்னிடம் சண்டையிட்டிருக்கிறார்கள் தெரியுமா?

கோகுலன் said...

வாங்க வாங்க தோழி ஹேமா.. என் வலைப்பூவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்..

//மனிதத்தைத் தட்டியெழுப்ப மீன்கூட முயற்சிக்கிறது.மனிதன் இன்னும் போதையில்தான்.

//

உண்மைதான்.. சமீபமாய் ஒரு வீடியோகாட்சி.. உயிருள்ள ஒரு மீனை செதில் நீக்கி, கிழித்து மசால் அதடவி, எண்ணையில் பொரித்து, முள்கரண்டியால் குத்தி சாப்பிடுகிறார்கள்.. அதுவரைக்கும் அந்த மீன் உயிருடனே இருக்கிறது.. அதன் பாதிப்பே இந்த கவிதை..

நாம் எங்கே போகிறோம்? நம் மனிதம் எங்கே போய் விட்டது? நான் என் பிள்ளையும் கூட இப்பிடித்தான் வாழநேரிடுமோ என அச்சமாக இருக்கிறது..

கோகுலன் said...

//மீனின் கேள்விக்கு பதிலில்லை.
மீனுண்ணாமல் வாழ்வில்லையென
வாழும் மனிதரிடன் இதைச்சொல்ல
நமக்கும் தெம்பில்லை-சொன்னால்
சொல்வார் "இன்னும் இறங்கல":(!

அருமையான கவிதை கோகுலன்.
அடிக்கடி எழுதுங்கள். புதிதாக எழுதியிருக்கிறீர்களா என அடிக்கடி வந்து என்னைப் போல் எத்தனை பேர் வந்து பார்த்துச் செல்கிறார்களோ!//

மிக்க நன்றிகள் தோழி ராமலக்ஷ்மி..

அடிக்கடி எழுதுகிறேன் தான்.. ஆனால் இங்கே வந்து பதிய சோம்பேறித்தனம்.. மேலும் அலுவலக வேலை வேறு.. இனி கவிதைகள் அடிக்கடி பதிவிடுகிறேன் தோழி!!

கோகுலன் said...

//கவிதை அழகு.
இறுதிவரிகளில் கவிதையின் முழுபாரத்தையும் ஏற்றியிருக்கின்றாய்.
//

ஊக்கமிக்க பின்னூட்டம் நண்பனே..
உன் அன்பும் ஊக்கமும் இருக்க இன்னும் அதிக தூரம் பயணிப்பேன் உயிர் நண்பனே!!

நன்றிகள்!!

ஹேமா said...

மனிதன் மனிதனாய் வாழும் வரை...
வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் வரை மனிதம் தொலையாது கோகுலன்.எம் குழந்தைகளுக்கும் நாம்தான் வழிகாட்டிகள்.நல்லதே நடக்கும்.நம்புவோம்.

செல்வேந்திரன் said...

பகுத்தறிவை கொண்டு பார்த்தால் செரிக்கும் உணவை உண்ணுவதில் தவறில்லை என்று சொல்லலாம்தான்.. நான் விவாதிக்கும் நோக்கில் சொல்லவில்லை...

உணவுக்காக மற்ற இனத்தினை கொல்வதை விட ..வேறு பல காரணங்களுக்கு
தன்னினத்தை கொல்வதுதான் சீரனிக்க முடியாத விசயமாக இருக்கிறது எனக்கு...

அருமையான சொல்லாடல்...கவிதையின் நெளிவு சுளிவு(எழத்துப்பிழை இருந்தால் திருத்தவும்) அற்புதம்..

அன்புடன்,
செல்வேந்திரன்