Welcome!


தாய்க்கான கவிதை

7:21 PM Posted In Edit This 10 Comments »
























சேயின் தாய்க்கான ஒரு கவிதை!!

செந்தமிழில் நற்சொல்லாய்
சிலவற்றை தேர்ந்தெடுத்து
அதிகாலை பனிமழையில்
முதல்துளியை சேகரித்து
நள்ளிரவு விழித்திருந்து
நிலவொளியை நூல்பிரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

பொன்வண்டின் நிறம்வாங்கி
மழலையுமிழ் நீர்வாங்கி
மலரினங்கம் புணர்ந்துநின்ற
மழைத்துளிகள் சிலவாங்கி
தேன்சிட்டின் தேன்குழலில்
தேந்துளியை கடன்வாங்கி
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

தகதகக்கும் கதிரொளியும்
குளத்தின்மேல் பட்டுயெழ
முகமலர்ந்த தாமரையால்
அவ்வொளியை அள்ளிவைத்து
அதிகாலை மூங்கிலிசை
அரும்புகளில் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

சந்தனத்தின் சுகந்தத்தையும்
தென்றல்தந்த குளிர்தனையும்
நந்தவன சோலையிலே
கருவண்டின் தாலாட்டும்
அந்தியினில் மஞ்சளோடும்
ஆற்றுநீர் அழகுங்கொண்டு
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

வெண்ணிலாவும் தொட்டிராத
வானவில்லின் வர்ணங்களை
மண்ணிலிவன் தொடஎண்ணி
தோற்றுப்போன வேளைதனில்
பிச்சையிட்ட பட்டாம்பூச்சி
இறகுவண்ணம் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

நுரைபொங்கும் கடற்கரையின்
ஆரவாரத் துளிசிலவும்
நடுக்கடலின் தாலாட்டும்
பேரமைதி துளிசிலவும்
முகம்பார்த்து மினுமினுக்கும்
விண்மீன்கள் சிலசேர்த்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

அழகழகாய் பலசேர்த்து
இவன்செய்த மாலைதனை
தாயவளின் கரங்களிலே
அன்புடனே நான் கொடுக்க
வாங்கியவள் புன்னகைக்க,
அப்புனைகையின் உன்னதத்தில்
நான் தொடுத்த மாலையதோ
வெட்கியே வாடிப்போச்சு!






தாயின் சேய்க்கான ஒரு கவிதை!!

புல்லாங்குழல் இசைகேட்டேன் - அடிவயிற்றில்
பூவிரிய நான் கேட்டேன்
காய்ந்துகிடந்த கருப்பையில் - கண்ணேநீ
மழைத்துளியாய் விழக்கேட்டேன்

உயிரென்னும் வீணையதில் - தாய்மையெனும்
நரம்பினை நீ சுண்டிவிட
உச்சிமுதல் பாதம்வரை - நானடைந்த
பரவசத்தை என்சொல்வேன்?

வயிற்றில்நீ வளர்கையிலே - தோட்டத்தின்
வண்ணத்துப் பூச்சியெல்லாம்
பூதேடி என்வயிற்றில் - தினமும்
முத்தமிட்டே போனதடா!

மூன்றாம் பிறையாக - என்வயிற்றில்
நாளும்நீ வளர்ந்துவர
அடிவயிறு நிறைந்திருக்க - மார்புகளில்
மலர்மாரி பொழியுதடா!

பாலூறும் மார்பகத்தே - புதிதாய்
பனித்துளியின் பிரசவங்கள்
உயிர்தொட்ட பரவசங்கள் - பாவையிவள்
பாங்குடனே உணருகின்றேன்

மண்ணுறங்கி விண்ணுறங்கி - வெள்ளை
நிலவுறங்கா நள்ளிரவில்
சேயுறங்க அடிவயிற்றை - மெள்ளவே
தொட்டுத்தொட்டு ரசித்திருப்பேன்

சேயசையும் கணங்களிலே -அன்புடனே
புன்னகைத்து உள்திரும்பி
பிஞ்சுவிரல் பற்றிக்கொண்டு - பலப்பல
ஊர்க்கதைகள் ஆரம்பிப்பேன்

எட்டிநீ உதைக்கையிலும் - நானடைந்த
எக்காளம் என்சொல்வேன்
சோம்பல்நீ முறிக்கையிலே - எனக்குள்ளே
குறுகுறுப்பில் குதூகலிப்பேன்!

பைந்தமிழ் கவிகேட்டால் - நீயடையும்
பரவசத்தை நானுணர்வேன்
மனமயக்கும் மெல்லிசையிம் - தினமும்
நீமயங்க நானுணர்வேன்

அன்னையிவள் உணர்ச்சிகளை - அகமலரும்
உயிர்ப்பூவின் வாசமதை
வார்த்தைகளில் முழுமைசொல்ல - இவ்வுலகில்
கம்பன்வந்தும் கூடிடுமோ?

10 comments:

Kavinaya said...

கோகுலன்! உங்களோட "தாய்க்கான கவிதை" படிச்சு அசந்துட்டேன். என்னமா தமிழ் கொஞ்சுது! இன்ன வரின்னு இல்லாம அத்தனையும் முத்துதான். உங்க அம்மா மேல எவ்வளவு அன்புன்னு நல்லாவே தெரியுது. அதுலயும் கடைசில அம்மா புன்னகையைப் பாத்து மாலை வெட்கினதா முடிச்சது ரொம்ப அருமை!

கோகுலன் said...

ரொம்ப தேங்க்ஸ் கவிநயா!!

M.Rishan Shareef said...

'தாய்க்கான கவிதை' மிக அழகாக வந்திருக்கிறது.இன்ன வரியென்று எடுத்துச் சொல்லமுடியாமல் அத்தனையும் அழகுடனே,அருமையாகப் பின்னப்பட்ட கவிதையிது.

அன்பின் கோகுலன்,கவிதை மிக அருமை.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் நண்பா :)
தொடர்ந்து எழுதுங்கள் !

கோபிநாத் said...

வணக்கம் கோகுலன் ;)

கவிநயாவின் பதிவின் மூலமாக உங்க பக்கம் வந்தேன்...வந்தவனை வாயடைத்து வச்சிட்டிங்க..;)

ஒவ்வொரு வரியும்...ஒவ்வொரு அழகு...மிக மிக மிக ரசித்தேன் ;)

வாழ்த்துக்கள் ;)

கோகுலன் said...

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்பா!!

:)))

கோகுலன் said...

வாங்க கோபிநாத்..
உங்களை நெஞ்சார தழுவி வரவேற்கிறேன்...

தங்களின் மேலான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி..
மேலும் உங்களின் நேரத்திற்கும் மிக்க நன்றிகள்!!

ரமேஷ் வைத்யா said...

கைமாலை போட்டுன்னைக்
கண்போல வளர்த்தாளை
சொல்மாலை கொண்டே நீ
சொக்கவைத்தாய் என்கவிஞா

தெம்மாங்குத் தாலாட்டில்
பொழிந்திருப்பாள் தமிழ்மாரி
அம்மழையில் நனைந்தே நீ
கவிநெய்தாய் பூமாரி

கோகுலன் said...

//கைமாலை போட்டுன்னைக்
கண்போல வளர்த்தாளை
சொல்மாலை கொண்டே நீ
சொக்கவைத்தாய் என்கவிஞா

தெம்மாங்குத் தாலாட்டில்
பொழிந்திருப்பாள் தமிழ்மாரி
அம்மழையில் நனைந்தே நீ
கவிநெய்தாய் பூமாரி//

வாவ்.. ரமேஷ்!!

கலக்கான பின்னூட்டம்...அசத்தீட்டிங்க ..
கவிதை கலக்கலா இருக்குங்க. உங்கள் கவித்திறமை இந்த வரிகளிலே தெரிகிறது.
மிக்க நன்றிங்க..

கோகுலன் said...

மேலும் நண்பர்களே!!

இதே கவிதையை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளேன்..

விரைவில் இடுகிறேன்..

Natchathraa said...

கண்ணா....

//புல்லாங்குழல் இசைகேட்டேன் - அடிவயிற்றில்
பூவிரிய நான் கேட்டேன்//

இந்த வரிகள் படிக்கும் போதே என் அடிவயிற்றில் பூவிரிய நான் உணர்ந்தேன்....

//வயிற்றில்நீ வளர்கையிலே - தோட்டத்தின்
வண்ணத்துப் பூச்சியெல்லாம்
பூதேடி என்வயிற்றில் - தினமும்
முத்தமிட்டே போனதடா!//

என் வயிற்றில் பிள்ளையிருப்பதாய் நான் உணர்ந்தேன்....

//மண்ணுறங்கி விண்ணுறங்கி - வெள்ளை
நிலவுறங்கா நள்ளிரவில்
சேயுறங்க அடிவயிற்றை - மெள்ளவே
தொட்டுத்தொட்டு ரசித்திருப்பேன்//

நானும் தொட்டு பார்த்துக்கொள்கிறேன்...

//சேயசையும் கணங்களிலே -அன்புடனே
புன்னகைத்து உள்திரும்பி//

எனக்குள்ளே பிள்ளை அசையும் உணர்வினை நான் பெற்றேன்...

//பைந்தமிழ் கவிகேட்டால் - நீயடையும்
பரவசத்தை நானுணர்வேன்
மனமயக்கும் மெல்லிசையிம் - தினமும்
நீமயங்க நானுணர்வேன்//

உங்களோட இந்த வரிகள் என்னையும் சில நிமிடங்கள் பிள்ளை வயிற்றில் இருக்கும் சுகத்தினை, வரத்தினை அனுபவிக்க வைத்தது.....

உன்னதமான கவிஞன் நீங்கள்.....

அன்புடன்

நட்சத்திரா...