Welcome!


மீட்பு

9:52 AM Edit This 6 Comments »
இச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது. சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html


பவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீதி தண்ணீரில் முகத்தைக் கழுவி உடுத்தியிருந்த கைலியிலேயே குனிந்து முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் என்னைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தான்.

" ஏ.. வாடா பவுனு, எப்பிர்ரா இருக்கே " என்றபடி அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்தபோது " பரவாயில்லடா, திண்ணயிலயே உக்காரலாம் " என்று சொல்லி அமரப்போனவனை சரிதான் வாடா என்று உள்ளே இழுத்து வந்தேன். சோபாவில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு அதில் அமரச் சொன்னேன். அருகே நின்றிருந்த அம்மா ஏதாவது நினைத்துக்கொள்ளக்கூடும் என்று தயங்கியபடியே நின்றான்.

அவனது அம்மா தங்கச்சி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துவிட்டு அம்மா உள்ளே சென்றுவிட்டாள். அப்பொழுதும் அமராமல் நின்றுகொண்டிருந்தவனை " ஒத வாங்கப்போறடா நீ , உக்காரு " என்றபடி தோளை அழுத்தி உட்கார வைத்தும்கூட சோபாவின் நுனியிலேயே அமர்ந்திருந்தான். அவ்வளவு சொல்லியும் வீட்டுக்குள் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவனும்தான் என்ன செய்வான், பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறான்.

சரி, பரவாயில்லை என்று கடைசியில் திண்ணைக்கே வந்தோம். அம்மா காப்பியும் முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டே தெருவை வேடிக்கை பார்த்தபடி சென்றமுறை பார்த்ததற்குப் பின்பு நடந்த அனைத்து கதைகளையும் பேசிக்கொண்டிருந்தோம்.

பவுனை எனக்கு இரண்டு வயதிலிருந்தே தெரியும். என் பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும்விட எனக்கு முதன் முதலாக அறிமுகமானவன் அவன்தான். இத்தனைக்கும் அவனுக்கு எங்கள் ஊர் கிடையாது. எங்கள் ஊருக்குத் தெற்கில் ஆற்றைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயலி தான் அவனது ஊர். அவனது அம்மா மாடத்தி எங்கள் ஊரில் பல வீடுகளுக்கு துணி வெளுக்கும் வண்ணாத்தி. எனக்கு விபரம் தெரிய எங்கள் வீட்டுக்கும் அவள்தான் துணி வெளுத்தாள். அவள் வெளுத்துக் கொண்டுவரும் உவர்மண் கமகமக்கும் துணிகளை முகர்ந்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அப்பொழுதெல்லாம் ஆற்றிலிருந்து ஒற்றையடிப்பாதை வழியே ஊருக்குள் வரும்போது எங்கள் வீடுதான் முதலாவதாக இருக்கும். பகலில் அழுக்குத் துணியெடுக்க வரும் போதும் இரவில் சோறெடுக்க வரும்போதும் இரண்டு வயது பவுனை இடுப்பில் சுமந்துகொண்டு அந்தப் பாதை வழியாகத்தான் வருவாள் மாடத்தி.

" பொதியோட புள்ளயயும் தூக்கி ஊரெல்லாம் சொமக்காட்டத்தான் என்ன, இங்கனக்கூடி விட்டுட்டுப்போ மாடத்தி, அவம்பாட்டுக்கு இங்கனக்கூடி வெளயாடிட்டு நிப்பான்..நான் வேண்ணா பாத்துக்கிடுதேன்.. " என்று ஒருநாள் அம்மாதான் சொன்னாளாம். ஆச்சியோ ஐயாவோ திட்டிவிடுவார்களோ என்று முதலில் தயங்கியவள் அம்மா மறுபடியும் சொல்லக்கேட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் பவுனை விட்டுவிட்டுப்போக ஆரம்பித்தாளாம். பின்பு அதுவே வழக்கமாகிவிட்டதாம். நானும் அவனும் ஒரே வயது எனபதால் திண்ணையில் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருப்போம் என அம்மா சொல்லியிருக்கிறாள்.

எக்காரணம் கொண்டும் தான் திரும்பி வரும்வரைக்கும் திண்ணையிலிருந்து இறங்கவும் கூடாது வீட்டுக்குள் போகவும் கூடாது என்று மாடத்தி பவுனிடம் கறாராகச் சொல்லிவிட்டுச் செல்வாளாம். அவனும் அவ்வளவு கெட்டிக்காரனாக திண்ணைவிட்டு இறங்காமல் விளையாடுவானாம். ஒரு நாள் மழைபெய்தபோது கூட திண்ணையில் சுவரோரம் ஒண்டிக்கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தவனை அம்மா இழுத்துவந்து வீட்டுக்குள் வைத்திருந்தாளாம். அப்பொழுதும் கூட நான் திண்ணைக்குப் போகணும் என்று அடம்பிடித்து ஓடிவிட்டதாக அம்மா சொல்வாள்.

நான் கல்லூரி விடுதியிலிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன் என்று அவனுக்குத் தெரியும். வருடத்தில் அந்த சமயம் மட்டும்தான் அவனுக்கும் லீவு கிடைக்கும் என்பதால் அவனும் ஊருக்கு வருவான். வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக்கொண்டு எப்படியும் என்னை பார்க்க ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் எப்பொழுது வந்தாலும் திண்ணையில் தான் உட்காருவான். அம்மா அழைத்தாலும்கூட வீட்டுக்குள் வரமாட்டான்.

இதேபோல் தான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு பல கதைகளும் பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் சிறு வயதில் இதே திண்ணையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று சிரித்துக்கொண்டே கேட்பான். என்ன என் ஞாபகசக்தியோ, அந்த நாட்கள் ஒன்றுகூட எனக்கு ஞாபகம் இருந்ததே இல்லை. ஆனால் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நான் ஒருமுறை திண்ணையிலிருந்து அவனை கீழே தள்ளிவிட்டதைக்கூட ஞாபகம் வைத்திருந்தான்.

மாடத்தி துணி வெளுக்கும் காலத்தில் கைமாத்தாக பணம் ஏதும் வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்பாள், பத்து ஐம்பது என தேவைக்கு வாங்கிக்கொண்டு அப்புறம் கொடுத்தும் விடுவாள். ஒருநாள் அவளுக்கு பணம் கொடுப்பதை பார்த்துவிட்ட ஆச்சி அம்மாவை திட்டினாளாம். மாடத்தியிடமும் " இப்டி சும்மால்லாம் கைமாத்து வாங்கிற வேல வச்சுக்கிடாத " என்று சொல்லிவிட்டாளாம். அதிலிருந்து பணமேதும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்தே தவலைப்பானை, குத்துவிளக்கு என எதையாவது தூக்கிக்கொண்டு வருவாள். ஆச்சியிடமே அடகுவைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வாள். அதில் திருப்பாமலேயே போய்விட்ட பெரும்பாலானவை இன்னும் அரங்குவீட்டில் பழைய பாத்திரங்களோடு கிடக்கின்றன.

பள்ளிக்கூடத்திலும் நானும் பவுனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தினமும் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வருவான். வகுப்பிலும் என்னை மட்டும் தான் வாடா போடா என்று பேசுவான். மற்ற அனைவரையும் சமவயது பையன்கள் என்றாலும் 'ஐயா' என்று பேசுவான். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் அவனே அதைப்பற்றி என்னிடம் பேசினான்.

" டேய், எங்கம்மா என்னய திட்டுதுடா, உன்னயும் ஐயான்னுதான் கூப்பிடணுமாம்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. "

" அவங்க சொன்னாங்கன்னு என்னயல்லாம் அப்டி கூப்புடாதடா.. எனக்கு புடிக்காது.. " என்றேன்.

ம்ம் .. என்றபடி அமைதியாக இருந்தவன் " உனக்குத் தெரியுமா, மொதலியாருக வீடுகள்ளயே நான் வீட்டுக்குள்ள வரைக்கும் போனது உங்க வீட்ல மட்டும்தாண்டா, உங்க அம்மா மட்டும்தான் எனக்கு காப்பில்லாம் போட்டு குடுத்திருக்கு " என்றான்.

" அதுக்கென்னடா இப்போ, நீ வேற பேச்சு பேசுடா " என்றதும் அமைதியாகிவிட்டான். அதன்பிறகு நானோ அவனோ அப்படிப்பட்ட உரையாடலை எப்பொழுதும் பேச விரும்பவில்லை.

பவுனும் நன்றாக படித்தான் தான். எப்படியென்று தெரியவில்லை, ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டான். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை. எப்படியாவது பத்தாவதும் எழுதி, ஃபெயிலானாலும் பரவாயில்லை, ஏதாவது சர்க்கார் ஆபீஸ்ல பியூன் வேலையாவது வாங்கிவிடலாம் என்று மாடத்தி எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். ம்ஹூம்.. எதுவும் நடக்கவில்லை. பெயிலாகிவிட்ட பிறகு அதே பள்ளிக்கூடத்தில் போய் படிக்கவே மட்டேன் என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டான்.

வீட்டில் சும்மா இருந்தவனை அவனது மாமா அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் ஒரு பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் இராணுவ விடுதி ஒன்றில் துணி தேய்க்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஒருநாள் மாடத்தி வந்து சொன்னாள்.

இந்தமுறை வீட்டுக்கு வந்தவன் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், பொங்கல் முடிந்தவுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருப்பதாகவும், அதற்காகவே பொங்கலுடன் ஒருவாரம் லீவு சேர்த்து எடுத்திருப்பதாகவும் சொன்னான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நானும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னான்.

விஷயத்தைக் கேட்டு அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். பொதுவாக எங்கள் ஊரில் யாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களிலோ அவர்களும் எங்கள் வீட்டு விசேஷங்களிலோ கலந்துகொள்வதில்லை என்பதால் அம்மா பத்திரிக்கை வைப்பான் என்றோ கல்யாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை. மாடத்தியை என்றாவது கண்டால் எல்லாம் நல்ல படியாக நடந்ததா என்று கேட்டுக்கொள்வாள். ஆனாலும் நான் நிச்சயத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன். விடுமுறை கிடைத்தால் கல்யாணத்திற்கும் கண்டிப்பாக வருவதாகச் சொன்னேன். பவுனும் மிகவும் சந்தோசப்பட்டான்.

உட்கார்ந்து கதைபேசிகொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. " சர்டா, நான் வரட்டுமா " என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானவனை ஒரு நிமிடம் உள்ளே வாடா என்று அழைத்தேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு அரங்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த, நிறம் மங்கியிருந்த குத்துவிளக்கை அவன் கையில் கொடுத்து, தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் செய்யும்போது இதையும் பாலிஷ் செய்து கொடுத்துவிடு என்று சொன்னேன். அவனும் வேண்டாமென்று சொல்ல நினைத்து, பின் தயங்கி கையில் வாங்கிப் பார்த்தான். அந்த குத்துவிளக்கை அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கின் கீழ்த்தட்டில் சுற்றிலும்" மாடத்தி கல்யாணத்துக்கு தகப்பன் பெரியகருப்பன் சீர் குடுத்தது" என்று பெயர் வெட்டியிருந்தது.

அவன் ஆச்சரியமும் கேள்வியும் நிறைந்தவனாக என் முகத்தைப் பார்த்தபடியே அவனையும் அறியாமல் சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்தான்.

6 comments:

ஒளியவன் said...

மனதைத் தொடும் கதை நண்பா. வாழ்த்துகள்.

இரசிகை said...

chinna chinna unarvukalaik kooda theliva solleedureenga..
vaazhththukal..

இரசிகை said...

thalaippaip patrip pesiye aakanum..

inthak kathail niraya viyangal thalaippai jeevanullathaakkuthu..

niraya meetpu irukku.. intha kathaiyinul.. verum kuththuvilakkodu nintru vidavillai yenpathu mattum thinnam!

Kalpagam said...

அருமையான கதை கோகுலன், வாழ்த்துகள்!

மணிவேலன் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க,
கோகுலன்....

வெற்றி பெற வாழ்த்துகள்.

bupesh said...

very good one.