அம்மாவுக்கு..
7:44 PM Posted In தாய்மடி Edit This 1 Comment »தாயுந்தன் துன்பங்களை நானின்று நினைக்கையிலே
நெஞ்சினிலே நெருஞ்சிமுள் நெருக்கென்று தைக்கிறது
காலெட்டா வயதினிலே தறியிறங்கி பணிசெய்தாய்
நூல்தொட்டா அறுந்துவிடும் அதுதிரித்து துணிநெய்தாய்!
விளையாடும் வயதினிலே ஓடோடி உழைத்துநின்றாய்
தாய்வீட்டுக் கடனடைக்க ஓடாய்நீ தேய்ந்துநின்றாய்
தம்பிதங்கை வளர்த்திடவே கல்விதனை இழந்துநின்றாய்
அச்சிறு வயதினிலே அன்னையாய்நீ மாறிநின்றாய்!
குடிகார கணவனுடன் நல்வாழ்வு வாழ்ந்திடவே
குடிபுகும் புதுமனையில் பொறுமைதான் கொண்டுவந்தாய்
மாமியார் வசவுக்கெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டாய்
மக்களெம்மை பெற்றுநீயும் பண்புடனே வளர்த்துவிட்டாய்!
காலினிலே நெஞ்சினிலே நோய்நொடிகள் தைத்துநிற்க
மனங்கொண்ட தைரியத்தால் அத்தனையும் வென்றுவந்தாய்
பிள்ளைகளும் ஆளாகி குடும்பமென ஆகிவிட்டோம்
ராணியென வைத்திடவே நாங்களின்று ஆசைகொண்டோம்
நல்லசோறு தின்னவில்லை நீநல்லதுணி கட்டவில்லை
இன்றதற்கு வழியிருக்கு இஷ்டம்போல் வாழென்றால்
உந்தனையும் வாழ்வினையும் இருக்கூறாய்ப் பிரித்தபடி
விதியின் பேர்சொல்லி நோய்நொடிகள் தடுக்குதம்மா
சந்தோசம் எனும்சொல்லை எட்டநின்று காணலன்றி
உந்தோசம் நீங்கும்வரை உவப்புடன்நீ குளித்ததில்லை
கணக்கில்லா கஷ்டத்திலும் இப்பொழுதும் சொல்கிறாய்
"எனக்கென்ன குறைச்சல், முத்துப்போல் மூணுபிள்ளை!"
1 comments:
nice kavithai pravin, keep up
Post a Comment