மரணமொன்று வரக்கூடும்!
8:04 PM Edit This 0 Comments »சாளரத்தின் அப்புறச்சாலையில்
தெறிக்கும் பார்வைகளேந்தி
ஒதுக்கப்பட்டதோருலகின்
ஒற்றைப் பிரதிநிதியாயிருக்கிறேன்
அடிவயிற்றில் நீ உதைத்த சுவடுகள் முதல்
இக்கணத்திலான உதாசீனங்கள் வரை
இறைந்துகிடக்கும் நினைவுகளை
ஒவ்வொன்றாய் சேகரிக்கிறேன்
நீ பால்குடித்த மார்பகங்களின்
ஏளனங்கள் தாளாது
தனித்திசையில் வெற்றுப்பயணமேகிறேன்
மடியில் நீ
மணிக்கணக்காய் உறங்குகையில்
அசையாது மரத்துப்போன கால்கள்
மெதுவாய் அசைகின்றன மனதில்
வாரமொருமுறை
வருவதற்கான உன் உத்திரவாதம்
மாதங்கள் விழுங்கிக் காத்திருக்கிறது
அத்தனை கஷ்டத்தினூடும்
உன்னைப்படிக்க வைத்த படிப்பில்
தாயைப்பற்றி ஒருவரி இல்லாமற்போனதுதான்
பரிசீலனைக்குரியதாயிருக்கிறது
பரவாயில்லை..
அறைக்கதவு திறந்தேயுள்ளது
நீ வருவதற்கான சாத்தியங்கள் குறைவெனினும்
கட்டாயங்களின் பொருட்டு
எந்நேரமும் மரணமொன்று வரக்கூடும்!
0 comments:
Post a Comment