Welcome!


இயற்கை புனிதம்:

7:08 PM Posted In Edit This 8 Comments »








அதிகாலை தோட்டத்தின் புல்வெளியில்
பனித்துளிகள் மிதந்திருக்க நான்கண்டேன்
மதிநிறைந்த இரவென்னும் கன்னியவள்
கால்கொலுசின் முத்துகள்தான் சிந்தினவோ?
குதித்தோடும் முழுமதியும் முன்னிரவில்
சிரிப்பொலியை சிதறித்தான் சென்றதுவோ?
கதிரவனும் கிழக்கெழவே நானுணர்ந்தேன்
அவையனைத்தும் முத்தல்ல வைரமென்று!

செங்கதிரோன் வெண்கதிர்கள் சிதறிவிழ
பனித்துளியை பட்டைதீட்டி வைத்தவன் யார்?
தீங்கில்லா பைம்புற்கள் ஒவ்வொன்றும்
வைரமதை முடிதாங்கி நிற்குதுபார்!
தாங்குகின்ற வெயிலவனின் காமமதில்
வைரமெல்லாம் மெள்ளமெள்ள கரைந்தபடி
பாங்குடனே இயற்கையரங் கேற்றுகின்ற
வைகறையின் புணர்ச்சியது என்னேயழகு!

சிறகசைத்து பறந்துவரும் பட்டாம்பூச்சி
பனித்துளியை முத்தமிட துடிக்குதுகாண்
பறவைகளில் சக்ரவாகம் அதனைப்போலே
மனமிங்கே பனித்துளிக்காய் ஏங்கிடுதே!
அறங்களிலே சிறந்ததொன்று அன்புசெய்தல்
இயற்கையின் மேலதுமட்டும் விதிவிலக்கோ?
உறவுகளில் தாய்மைபோலெ இயற்கைபுனிதம்
அதனையறியாமல் இவ்வுலகில் வாழ்க்கைவீணே!

8 comments:

ruthraavinkavithaikal.blogspot.com said...

அன்புள்ள‌ கோகுல‌ன் க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளே

உங்க‌ளின் "இய‌ற்கை புனித‌ம்" க‌விதையை நான்
மிக‌வும் ர‌சித்து எழுதிய‌ க‌விதை இது.



புல்மீது
ஒரு ப‌ஞ்ச‌ணை செய்து
ப‌னித்துளி
ப‌டுத்துற‌ங்க‌
வ‌கை செய்த‌து போல்
ஒரு க‌விதை
உங்க‌ள் க‌விதை.
"க‌வ‌லையில்லா ம‌னித‌ன்" ப‌ற்றி
க‌விய‌ர‌சு க‌வ‌லைப்ப‌ட்டடார்.
த‌ன்னைப்ப‌ற்றி
க‌வ‌லை கொள்ளாத‌வ‌ன்
ம‌னித‌ன் ம‌ட்டும் அல்ல‌.
அவ‌ன் க‌விஞ‌ன்.
ஆம்.
ச‌ன்ன‌ல் வ‌ழியே
ச‌ரியாய் காற்று வ‌ருமா
நான் தூங்குவ‌த‌ற்கு
என்று க‌வ‌லைப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ந‌டுவே
ச‌ன்ன‌ல் வ‌ழியே உற்றுப்பார்த்துக்கொண்டே
அந்த‌ ப‌னித்துளிக்குள்
ஒரு ப‌ளிங்கு மாளிகை க‌ட்ட‌லாமா
நாளை வ‌ரும் சூரிய‌னுகாக‌
என்று
விடிய‌ல் ஒளிச்சித‌ற‌ல்க‌ளின்
"ஏழுவ‌ர்ண‌ அட்டைப்ப‌ட‌ம் போட்டு"
அச்சிட்ட‌து போல்
அழ‌கிய‌ க‌விதை ஒன்று த‌ந்த‌
உங்க‌ளுக்கு
என் ம‌ன‌ம் விரிந்த‌ பாராட்டுக‌ள்.

============================ருத்ரா
< epsi_van@hotmail.com >

கோகுலன் said...

அன்பின் ருத்ரா!!

விமர்சனத்திற்கென ஒரு கவிதையே எழுதி விட்டீர்கள்..

அருமை, அருமை..

தங்களின் உயர்வான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் :))

"க‌வ‌லையில்லா ம‌னித‌ன்" ப‌ற்றி
க‌விய‌ர‌சு க‌வ‌லைப்ப‌ட்டடார்.
த‌ன்னைப்ப‌ற்றி
க‌வ‌லை கொள்ளாத‌வ‌ன்
ம‌னித‌ன் ம‌ட்டும் அல்ல‌.
அவ‌ன் க‌விஞ‌ன்.

தங்களின் வரிகளை மிகவும் ரசித்தேன்.

மீண்டும் நன்றிகள்..

தோழமையுடன்,
கோகுலன்.

I AM naagaraa said...

"இயற்கை புனிதம்" கவிதை அருமை. வாழ்த்துக்கள் கோகுலன்.

இரவுப் பறவை
இட்டுச் சென்ற எச்சமா
புல்நுனி மேல் பனித்துளி

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்

கோகுலன் said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் நாகரா!!

இரவுப் பறவை
இட்டுச் சென்ற எச்சமா
புல்நுனி மேல் பனித்துளி

அருமை!! அருமை!!

நல்ல உவமை..

மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை...

நட்புடன்,
கோகுலன்.

M.Rishan Shareef said...

இயற்கையின் நீர்த்துளியொன்று கோகுலனின் பார்வையில் பட்டு மகுடத்தில் பதிக்கப்படும் உச்சக்கல்லாய் அழகான கவிதையாகி நிற்கிறது.

கோகுலனின் பார்வையில் சிக்கிய அப்பனித் துளி மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது.

வரங்கள் கேட்டுக் கிடைக்குமென்றால் கோகுலனின் கற்பனையைத் தான் நான் கேட்டு நிற்பேன்.

//அறங்களிலே சிறந்ததொன்று அன்புசெய்தல்
இயற்கையின் மேலதுமட்டும் விதிவிலக்கோ?
உறவுகளில் தாய்மைபோலெ இயற்கைபுனிதம்
அதனையறியாமல் இவ்வுலகில் வாழ்க்கைவீணே!//

மிக அருமை நண்பா.வாழ்த்துக்கள் !

ரசிகன் said...

அட.. புதிய பார்வை!!!.. நல்லாத்தானிருக்கு மக்கா:))

கோகுலன் said...

மிக்க நன்றிங்க ரசிகன்..

கோகுலன் said...

ரிஷான்..

என்ன இதெல்லாம்.. நான் ஏதோ எழுதுகிறேன்.. அவ்வளவுதான்..

மேலும், உங்களின் எழுத்துக்களைவிடவா?

நன்றி ரிஷான்..

கோகுலன்.