யாருமற்றதொரு பொழுதில்
2:41 PM Edit This 19 Comments »
அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!
- - o 0 o - -
வீடுமுழுவதும் நிறைந்துகிடக்கும்
மௌனத்தின் திடத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது
குளியலறையில் சொட்டுகின்ற
திரவக்கவிதை!
- - o 0 o - -
முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!
- - o 0 o - -
சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..
- - o 0 o - -
பின்முற்றத்தில்
காக்கைக்கு வைக்கப்பட்ட சாதத்தில்
அமைதியாய் மொய்த்துக்கிடக்கின்றன
உன் நினைவுகளையொத்த எறும்புகள்!
- - o 0 o - -