Welcome!


காதலர் தினக் கவிதை

7:30 PM Posted In Edit This 5 Comments »
























அன்பே!
நீ வேண்டும் எனக்கு

இல்லாமல் போனால்
இறக்க வேண்டிய சுவாசமாய்
வாழ்வின் முழுமைக்கும்
நீ வேண்டும் எனக்கு

உலகின் பாதைக்கெல்லாம்
ஒளிதரும் சூரியனாய்
எனக்கேயான பாதைகளுக்கு
நீ வேண்டும் எனக்கு

தனிமையின் தாகத்தில்
வானம் பார்க்க
கொட்டிப்போகின்ற சிறுமழையாய்
நீ வேண்டும் எனக்கு

சோர்வில் அண்ணாந்து
பார்க்கின்ற பொழுதெல்லாம்
சொர்க்கத்தின்
சாயல் காட்டிநிற்கும்
பரந்துபோன வானமாய்
நீ வேண்டும் எனக்கு

பனி இரவில்
தீயின் வெப்பம் ஏந்தி
இரவை இதமாக்க நீ
வேண்டும் எனக்கு

உயிர்ப்புல்வெளியில்
சிதறிக்கிடக்கும்
பனித்துளிகளை
கொட்டிப்போகும் பின்னிரவாய்
நீ வேண்டும் எனக்கு

அதிகாலை காதுக்குள்
இசையில் கூச்சமூட்டும்
ஜன்னலோர குருவிகளாய்
நீ வேண்டும் எனக்கு

தோல்வி நேரத்திலும்
வெற்றியின் களிப்பு தரும்
தோட்டத்துப்பூக்களாய்
நீ வேண்டும் எனக்கு

மொட்டைமாடி பாய்விரித்து
நட்சத்திரம் எண்ணிக்கிடக்கும்
நிலவுக்குளியலில்
நீ வேண்டும் எனக்கு

உன் இன்னொரு பிள்ளை நானுமாய்
என் இன்னொரு தாய் நீயுமாய்
சாவிற்கு சற்று தள்ளியும் கூட
நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு!

தாய்க்கான கவிதை

7:21 PM Posted In Edit This 10 Comments »
























சேயின் தாய்க்கான ஒரு கவிதை!!

செந்தமிழில் நற்சொல்லாய்
சிலவற்றை தேர்ந்தெடுத்து
அதிகாலை பனிமழையில்
முதல்துளியை சேகரித்து
நள்ளிரவு விழித்திருந்து
நிலவொளியை நூல்பிரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

பொன்வண்டின் நிறம்வாங்கி
மழலையுமிழ் நீர்வாங்கி
மலரினங்கம் புணர்ந்துநின்ற
மழைத்துளிகள் சிலவாங்கி
தேன்சிட்டின் தேன்குழலில்
தேந்துளியை கடன்வாங்கி
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

தகதகக்கும் கதிரொளியும்
குளத்தின்மேல் பட்டுயெழ
முகமலர்ந்த தாமரையால்
அவ்வொளியை அள்ளிவைத்து
அதிகாலை மூங்கிலிசை
அரும்புகளில் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

சந்தனத்தின் சுகந்தத்தையும்
தென்றல்தந்த குளிர்தனையும்
நந்தவன சோலையிலே
கருவண்டின் தாலாட்டும்
அந்தியினில் மஞ்சளோடும்
ஆற்றுநீர் அழகுங்கொண்டு
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

வெண்ணிலாவும் தொட்டிராத
வானவில்லின் வர்ணங்களை
மண்ணிலிவன் தொடஎண்ணி
தோற்றுப்போன வேளைதனில்
பிச்சையிட்ட பட்டாம்பூச்சி
இறகுவண்ணம் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

நுரைபொங்கும் கடற்கரையின்
ஆரவாரத் துளிசிலவும்
நடுக்கடலின் தாலாட்டும்
பேரமைதி துளிசிலவும்
முகம்பார்த்து மினுமினுக்கும்
விண்மீன்கள் சிலசேர்த்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

அழகழகாய் பலசேர்த்து
இவன்செய்த மாலைதனை
தாயவளின் கரங்களிலே
அன்புடனே நான் கொடுக்க
வாங்கியவள் புன்னகைக்க,
அப்புனைகையின் உன்னதத்தில்
நான் தொடுத்த மாலையதோ
வெட்கியே வாடிப்போச்சு!






தாயின் சேய்க்கான ஒரு கவிதை!!

புல்லாங்குழல் இசைகேட்டேன் - அடிவயிற்றில்
பூவிரிய நான் கேட்டேன்
காய்ந்துகிடந்த கருப்பையில் - கண்ணேநீ
மழைத்துளியாய் விழக்கேட்டேன்

உயிரென்னும் வீணையதில் - தாய்மையெனும்
நரம்பினை நீ சுண்டிவிட
உச்சிமுதல் பாதம்வரை - நானடைந்த
பரவசத்தை என்சொல்வேன்?

வயிற்றில்நீ வளர்கையிலே - தோட்டத்தின்
வண்ணத்துப் பூச்சியெல்லாம்
பூதேடி என்வயிற்றில் - தினமும்
முத்தமிட்டே போனதடா!

மூன்றாம் பிறையாக - என்வயிற்றில்
நாளும்நீ வளர்ந்துவர
அடிவயிறு நிறைந்திருக்க - மார்புகளில்
மலர்மாரி பொழியுதடா!

பாலூறும் மார்பகத்தே - புதிதாய்
பனித்துளியின் பிரசவங்கள்
உயிர்தொட்ட பரவசங்கள் - பாவையிவள்
பாங்குடனே உணருகின்றேன்

மண்ணுறங்கி விண்ணுறங்கி - வெள்ளை
நிலவுறங்கா நள்ளிரவில்
சேயுறங்க அடிவயிற்றை - மெள்ளவே
தொட்டுத்தொட்டு ரசித்திருப்பேன்

சேயசையும் கணங்களிலே -அன்புடனே
புன்னகைத்து உள்திரும்பி
பிஞ்சுவிரல் பற்றிக்கொண்டு - பலப்பல
ஊர்க்கதைகள் ஆரம்பிப்பேன்

எட்டிநீ உதைக்கையிலும் - நானடைந்த
எக்காளம் என்சொல்வேன்
சோம்பல்நீ முறிக்கையிலே - எனக்குள்ளே
குறுகுறுப்பில் குதூகலிப்பேன்!

பைந்தமிழ் கவிகேட்டால் - நீயடையும்
பரவசத்தை நானுணர்வேன்
மனமயக்கும் மெல்லிசையிம் - தினமும்
நீமயங்க நானுணர்வேன்

அன்னையிவள் உணர்ச்சிகளை - அகமலரும்
உயிர்ப்பூவின் வாசமதை
வார்த்தைகளில் முழுமைசொல்ல - இவ்வுலகில்
கம்பன்வந்தும் கூடிடுமோ?

வந்தாலும் வரலாம்

7:01 PM Posted In Edit This 1 Comment »
இந்த அமைதியான இரவில்
பிரிந்திருக்கிறோம் நாம்

சாரளத்தின் வழியே
நான் காண்கிண்ற இந்த நிலா
உனதறையில் தற்சமயம்
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும்

இங்கே திரைச்சீலை அசைக்கின்ற
இதே தென்றல் உனதறையின்
திரைச்சீலைகளிடத்தும்
அதிகாரம் கொண்டிருக்கும்

கண்கள் வெறுமனே
நட்சத்திரங்களை கண்டுகொண்டிருக்க
நினைவுகளில் என்னை
சுமந்தபடி இருக்கும் உன்னைப்போலவே
நானும்..

இரவும்
விடியலை நோக்கி பயணப்பட்டு
வெகுதூரம் வந்தாகிவிட்டது
இனியேனும்
நினைவுகளில் அசதியால்
கொஞ்சம் தூக்கம்
வந்தாலும் வரலாம்

ஆனந்தம்

7:00 PM Posted In Edit This 1 Comment »
ஆனந்தம்

பறவைகள் விரிக்கும் இறகுகள் ஆனந்தம்
பகல்கள் துயிலும் இரவுகள் ஆனந்தம்
பகட்டுகள் கலவாத இயல்புகள் ஆனந்தம்
பண்பட்ட தமிழின் இனிமையும் ஆனந்தம்

நிலாதினம் உலாவரும் வான்வெளி ஆனந்தம்
நீரோடி விளையாடும் வயல்வெளி ஆனந்தம்
நித்தமும் மழலையின் வாய்மொழி ஆனந்தம்
நினைவுகள் அசைபோட வாழ்க்கையே ஆனந்தம்

சப்தங்கள் உறையும் தனிமைகள் ஆனந்தம்
சந்தங்கள் நிறையும் இன்னிசை ஆனந்தம்
சந்நிதியில் இறைவனின் தன்னருள் ஆனந்தம்
சக்தியை ஊட்டுகின்ற தியானமும் ஆனந்தம்

புலர்கின்ற நேரத்தில் புல்வெளி ஆனந்தம்
புல்வெளி பூத்திருக்கும் பனித்துளிகள் ஆனந்தம்
பனித்துளியை கவரவரும் கதிர்களும் ஆனந்தம்
புன்னகையில் சிவந்திருக்கும் கீழ்வானம் ஆனந்தம்

அலைகளை ரசிக்கின்ற கரைகள் ஆனந்தம்
அலைகள் கொட்டும் நுரைகள் ஆனந்தம்
அதிரும் கரவொலியில் பாராட்டு ஆனந்தம்
அன்புடன் தாய்பாடும் தாலாட்டு ஆனந்தம்

மாலையில் சோலையில் பட்சிகள் ஆனந்தம்
மனங்கவர் வண்ணத்து பூச்சிகள் ஆனந்தம்
மாலையில் சாரலுடன் குளிர்காற்று ஆனந்தம்
மழைத்தூறல் விழுமண்ணின் வாசனையும் ஆனந்தம்

கொட்டும் மழையினிலே நடைபோக ஆனந்தம்
கோடை வெயிலினிலே நீந்துவதும் ஆனந்தம்
கொஞ்சமும் பொய்யிலாத புன்னகைகள் ஆனந்தம்
கொட்டுகொட்டி ஆட்டமாடும் போகிகள் ஆனந்தம்

பேருந்து பயணத்தில் ஜன்னலோரம் ஆனந்தம்
பேச்சுத் துணையிருக்க நடுக்கடலும் ஆனந்தம்
பேர்சொல்லும் பிள்ளைபெற்ற தகப்பனுக்கு ஆனந்தம்
பேராசை இல்லாத மனமிருந்தால் ஆனந்தம்

சிறுவயது தோழர்கள் கண்டாலே ஆனந்தம்
சீராகச்சேல்லு மாற்றின் நீரோட்டம் ஆனந்தம்
சிந்தனையின் வந்துபோகும் கற்பனைகள் ஆனந்தம்
சிற்பிகையில் வரம்வாங்கும் கற்சிலைகள் ஆனந்தம்

திருவிழா நாட்களில் தாவணிகள் ஆனந்தம்
திருமணங்கள் நிறைத்துவரும் ஆவணிகள் ஆனந்தம்
திருப்பங்கள் அதிகமுள்ள மலைப்பாதை ஆனந்தம்
திரும்பதிரும்ப சொல்லிப்பார்க்க அவள்பெயரே ஆனந்தம்